Enable Javscript for better performance
ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு: கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு பதிலளிக்கஅமலாக்கத் துறைக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு: கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 31st January 2018 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்ச் 8-ஆம் தேதிக்குள் அதுதொடர்பான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
    கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
    அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
    இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருக்கு சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் முடக்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    அந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆனந்த் குரோவர், இந்த விவகாரத்தில் மேலும் சில ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
    வரும் மார்ச் 8-ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் கார்த்தி சிதம்பரத்தின் மனுவுக்கு விரிவான பதிலை அளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.
    இந்த விவகாரத்தை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கில் இருந்து விலகுவதாக கடந்த 10-ஆம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai