Enable Javscript for better performance
காஸ்கஞ்ச் கலவரம்: வன்முறையாளர்களுக்கு உ.பி. முதல்வர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    காஸ்கஞ்ச் கலவரம்: வன்முறையாளர்களுக்கு உ.பி. முதல்வர் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 31st January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் நகரில் நடைபெற்ற மதவாதக் கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், வன்முறையைத் தூண்டுவோர் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் நகரில் கடந்த குடியரசு தினத்தன்று மோட்டார்சைக்கிள் பேரணி ஒன்று நடைபெற்றது. அப்போது அந்த வாகனங்கள் மீது ஒரு பிரிவினர் கற்களை வீசித் தாக்கினர். இதைத் தொடர்ந்து இரு மதத்தவருக்கு இடையே கலவரம் வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். 3 கடைகள், 2 பேருந்துகள், ஒரு கார் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன. இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 118 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். காஸ்கஞ்ச் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள பகுதிகளிலும் போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    இந்நிலையில், மாநிலத்தில் வன்முறையைத் தூண்டுபவர்கள் தப்பிக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
    அவர் இது குறித்து லக்னௌவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசும்போது "மாநிலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது. அராஜகச் செயல்களில் ஈடுபடுவோர் தப்பிக்க முடியாது. வன்முறையைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    அறிக்கை கேட்கிறது உள்துறை அமைச்சகம்
    காஸ்கஞ்ச் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவானதொரு அறிக்கையை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரப் பிரதேச அரசிடம் கோரியுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு தகவல் கேட்டுள்ளது.


    திட்டமிட்ட வன்முறை
    இந்த விவகாரம் தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ்  சிங் கூறியதாவது:
    காஸ்கஞ்ச் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று கருதுகிறேன். இதில் சம்பந்தப்பட்ட யாரையும் ஆதித்யநாத் அரசு விட்டு வைக்காது. இந்தக் கலவரத்தில் சந்தன் குப்தா என்பவர் பலியானார். அவருக்குப் பதிலாக முகமது இஸ்மாயில் என்பவர் பலியாகியிருந்தால் ஊடகங்களில் வேறுவிதமான விவாதங்கள் நடைபெற்றிருக்கும். இந்த மனப்போக்கை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai