Enable Javscript for better performance
புதிய அமைப்பைத் தொடங்கினார் யஷ்வந்த் சின்ஹா: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    புதிய அமைப்பைத் தொடங்கினார் யஷ்வந்த் சின்ஹா: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா ஆதரவு

    By DIN  |   Published on : 31st January 2018 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்ஹா "ராஷ்டிர மஞ்ச்' என்ற புதிய அரசியல் அமைப்பை செவ்வாய்க்கிழமை தொடங்கினார். அதில் பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சத்ருகன் சின்ஹா, உள்கட்சிக்குள் கருத்து சுதந்திரம் இல்லை என்றும், புதிய அமைப்பில் சேர்ந்ததற்காக பாஜகவுக்கு எதிராகச் செயல்படுவேன் எனக் கருத வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
    வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரது வரிசையில் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவராவார். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைத்த பிறகு, மூத்த தலைவர்கள் எவருக்கும் அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. மாறாக கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் அவர்கள் அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
    இதனால் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி மீதும், மத்திய அரசின் செயல்பாடுகள் மீது பல்வேறு விமர்சனங்களை யஷ்வந்த் சின்ஹா முன்வைத்தார்.
    இத்தகைய சூழலில், "ராஷ்டிர மஞ்ச்' என்ற அமைப்பைத் தொடங்குவதாக அவர் அறிவித்தார். அதன்படி, அதற்கான தொடக்க நிகழ்ச்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளத்ரி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மஜித் மேமன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், குஜராத் முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் பவன் வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது:
    கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (ஜன. 30) மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றைய தினம் இருந்ததைப் போலவேதான் இப்போதும் சூழல் நிலவுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
    பாஜகவில் இருப்பவர்கள் எவரும் அதுகுறித்து கருத்து தெரிவிப்பதில்லை. அவர்கள் அனைவரும் ஒருவித அச்சத்தில் உள்ளனர். எங்களுக்கு அத்தகைய அச்சம் கிடையாது. தற்போது நாட்டில் விவாதங்களும், கருத்து வெளிப்பாடுகளும் ஒரு தலைபட்சமாக இருக்கின்றன. கடுமையான வார்த்தைகள் கையாளப்படுகின்றன. அது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியது.
    தற்போது நாங்கள் முன்னெடுத்திருக்கும் "ராஷ்டிர மஞ்ச்' என்ற அமைப்பானது தேசத்தின் நலனுக்கானது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிராக இது தொடங்கப்படவில்லை என்றார் யஷ்வந்த் சின்ஹா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai