முதியோர் நலனில் மாநிலங்கள் அக்கறை செலுத்துவதில்லை: உச்ச நீதிமன்றம் சாடல்
By DIN | Published on : 31st January 2018 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
முதியோரின் நலனில் ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்கள் அக்கறை செலுத்துவதில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான அஸ்வனி குமார், முதியோர் பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மூத்த குடிமக்களின் நலனைக் காக்க போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை என்றும் இதன் காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் வறுமையில் உழன்று வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் முதியோர் இல்லங்களை அமைக்க உத்தரவிடுமாறும் அந்த மனுவில் அஸ்வனி குமார் வலியுறுத்தியிருந்தார். அதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டது.
இந்நிலையில் அந்த வழக்கு, நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "இதுவரை 23 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன' என்றார். ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், அருணாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மட்டுமே அத்தகைய மனுக்களை சமர்ப்பிக்கவில்லை என்றார்.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு முதியோர் நலனில் எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது' என்றனர். மேலும், பதில் மனுக்களை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறும் அவர்கள் அறிவுறுத்தினார்.