வருகைப்பதிவு கட்டாய முறைக்கு எதிர்ப்பு: ஜேஎன்யூ மாணவர்கள் தொடர் போராட்டம்
By DIN | Published on : 31st January 2018 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வருகைப்பதிவு கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யூ) மாணவர்கள் 25-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர்.
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் நடைமுறை கடைப்பிடிக்கப்படாதநிலை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம், ஜேஎன்யூ மாணவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், மாணவர்களின் வருகைப்பதிவு கட்டாயமாக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 5-ஆம் தேதி முதல் ஜேஎன்யூ மாணவர்களுக்கு வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையில், "பி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பிஎச்., முதுநிலை பட்ட பட்டயப் படிப்புகள், எம்.பில்., பி.எச்டி. ஆகிய துறைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுடைய வருகைகளை தினம்தோறும் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 75 சதவீத வருகைப் பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவர்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கட்டாய வருகைப் பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைமையில், அனைத்திந்திய மாணவர் சங்கம் (ஏ.எஸ்.ஏ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) உள்பட மாணவர் அமைப்புகள் ஜனவரி 6- ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பாக அனைத்திந்திய மாணவர் சங்கத் துணைத் தலைவர் எ.சாய்பாலாஜி செவ்வாய்கிழமை கூறியதாவது: ஜேஎன்யூவை அழிக்கும் முயற்சிகளில் பாஜக அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த வருகைப் பதிவுக் கட்டாயமாக்கல் ஆகும். ஜேஎன்யூவின் மாண்பைக் குலைத்து மாணவர்களைத் தனியே வகுப்பறைகளுக்குள் முடக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.
ஜேஎன்யூவில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை மாணவர்கள். சமூகக் கட்டமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஜேஎன்யூவில் கல்வி கற்கும்போது சமூக அநீதிகளுக்கு எதிராகத் தைரியமாகக் குரல் கொடுக்கின்றனர். அந்த தைரியத்தை ஜேஎன்யூதான் வழங்குகிறது. இந்நிலையில், அத்தைரியத்தை இழக்கச் செய்து, மாணவர்களைத் தனியே வகுப்பறைகளுக்குள் முடக்க பாஜக அரசு முயல்கிறது.
இங்கே ஒரு துறையில் கல்வி கற்கும் மாணவர்கள் அந்தத் துறையின் வகுப்பறைகளுக்குள் மட்டும் முடங்கிக் கிடப்பதில்லை. இளங்கலை மாணவர்களை முதுகலை வகுப்புகளில் காணலாம். முதுகலை மாணவர்களை ஆய்வு மாணவர்களுக்கான வகுப்புகளில் காணலாம். அது தான் ஜேஎன்யூவின் தனித்துவம். வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படாத காலத்தில் இந்தியாவில் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக ஜேஎன்யூ இருந்தது. எந்த நிலையிலும், வருகைப் பதிவில் கையெழுத்திடுவதில்லை என மாணவர்கள் உறுதியாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 80 சதவீத மாணவர்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு என்றார்.
இந்நிலையில், இப்போராட்டங்களில் கலந்து கொள்ளாத அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) கடந்த ஜனவரி 27- ஆம் தேதி முதல் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஏபிவிபி தலைவர் விஜய் குமார் கூறியதாவது: வருகைப் பதிவைக் கட்டாயமாக்கியுள்ளதால் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஜேஎன்யூவில் மாணவர்கள் வகுப்பறைக்குள் கற்பதை விட வகுப்பறைக்கு வெளியே கற்பதுதான் அதிகம். ஆகவே, வருகைப் பதிவைக் கட்டாயமாக்கும் முட்டாள்தனமான முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும். இந்த முடிவைக் கைவிடும் வரை ஏபிவிபி தொடர்ச்சியாகப் போராடும் என்றார் அவர்.