Enable Javscript for better performance
வாகன விபத்து: ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    வாகன விபத்து: ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்

    By DIN  |   Published on : 31st January 2018 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகன விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விதித்திருந்த 6 மாதச் சிறைத் தண்டனையை ரத்து செய்து தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    அப்போது, நீதிசார் நோக்கின்றி மிக வழக்கமான முறையில் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
    இதுகுறித்த வழக்கு விவரம் வருமாறு: 
    ரமேஷ் குமார் என்பவர் வாகனத்தை கவனக்குறைவாகவும் வேகமாகவும் ஓட்டியதாகவும், இதனால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், முதல் தகவல் அறிக்கையில் விபத்து 2008, டிசம்பர் 3-ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
    இந்த வழக்கு தில்லி பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான குற்றம்சாட்டப்பட்ட நபர், "இந்த வழக்கில் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் நேரில் கண்ட தனிப்பட்ட சாட்சிகள் ஏதும் இல்லை. இதனால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று முறையிட்டார்.
    இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில், ரமேஷ் குமாருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து ரமேஷ் குமார் தரப்பில் தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கீழமை நீதிமன்றம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியதாக கூறப்பட்டிருந்தது.
    இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விரேந்தர் பட் , மனுதாரருக்கு (ரமேஷ் குமார்) குற்றவியல் அமர்வு நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். இது தொடர்பாக உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:
    இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை நீதிசார் நோக்கில் ஆராயாமல் மிக வழக்கமான முறையில் விசாரணை நீதிமன்ற நீதிபதியால் விசாரிக்கப்பட்டு குறைபாடுடைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்படவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும், சம்பவம் நிகழ்ந்த தேதி தொடர்பாக முரண்பாடுகள் இத்தீர்ப்பில் உள்ளன. இந்த அம்சத்தை பார்க்கும்போது தீர்ப்பு மேலும் குழப்பம் உடையதாக உள்ளது. தேதி முரண்பாடுகள் தொடர்பாக தீர்ப்பில் ஏதும் விவாதிக்கப்படவில்லை. இதனால், விபத்து சம்பவம் நவம்பர் 3-ஆம் தேதி நிகழ்ந்ததாக அல்லது டிசம்பர் 3-ஆம் தேதி நிகழ்ந்ததா என்பதை பகுத்தறிவது கடினமாக உள்ளது. மேலும், தீர்ப்பில் விபத்து சம்பவம் ஆகஸ்ட் மாதத்தில் நிகழ்ந்திருப்பதாகவும் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டுள்ளார். அதாவது "இந்த விபத்து ஆகஸ்ட் மாதம் பகல் வேளையில் நிகழ்ந்துள்ளது. வெயில் அதிகமாக கொளுத்தும் அதுபோன்ற நேரத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் தவிர்ப்பார்கள்' என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று தேதிகளில் பல முரண்பாடுகள் உள்ளன' என்று கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai