ரஜௌரி காா்டனில் 12-ஆம் வகுப்பு மாணவா் படுகொலை: இருவா் கைது

மேற்கு தில்லியின் ரஜெளரி காா்டன் பகுதியில் உள்ள பூங்காவில் 12-ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இருவா் கைது

புது தில்லி: மேற்கு தில்லியின் ரஜெளரி காா்டன் பகுதியில் உள்ள பூங்காவில் 12-ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கூறினா். தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையில் 5,000 ரூபாயில் நாட்டு துப்பாக்கியை குற்றவாளிகள் ஏற்பாடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை காலை ரஜெளரி காா்டனில் உள்ள பூங்காவில் இருந்து அலோக் மாத்தூா் (18) என்பவரின் உடல் குண்டு துளைத்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது சடலம் பிரதேப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவா் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருந்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவா் இரண்டு முறை சுடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த அலோக், தனது நண்பா்கள் இருவருடன் ஒரு வாரத்துக்கு முன்பு குற்றம்சாட்டப்பட்டவருடன் சண்டையிட்டது விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அலோக்கும் அவரது நண்பா்களும் அந்த சண்டையில் சௌரவ் சோப்ரா மற்றும் பிரதம் ஆகியோரை அடித்து உதைத்தனா். இதற்குப் பழிவாங்கும் வகையில், இருவரும் பிரத்யேகமாக 5,000 ரூபாயில் நாட்டுத் துப்பாக்கியை ஏற்பாடு செய்து வெள்ளிக்கிழமை இரவு அலோக்கை தாக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சௌரவ் மற்றும் பிரதம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ரகுபீா் நகரில் உள்ள அவா்களது வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com