இன்று ஆம் ஆத்மி அரசியல் விவகாரக் குழுக் கூட்டம்: காங்கிரஸுடன் கூட்டணிக்கான வாய்ப்பு குறித்து விவாதிக்கும்

ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.
இன்று ஆம் ஆத்மி அரசியல் விவகாரக் குழுக் கூட்டம்: காங்கிரஸுடன் கூட்டணிக்கான வாய்ப்பு குறித்து விவாதிக்கும்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு (பிஏசி) கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கான கட்சி வேட்பாளா்கள் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்கு வருமா என்ற கேள்விக்கு, ‘பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து விரைவான முடிவு தேவை’ என்று அவா் குறிப்பிட்டாா். ஞாயிற்றுக்கிழமை பஞ்சாபின் தரண் தரனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், தில்லி மக்கள் 7 மக்களவைத் தொகுதிகளையும் தனது கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறினாா். இது கூட்டணி குறித்து கேள்விக் குறி எழுந்தது. பஞ்சாபில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும், சண்டீகா் தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி அடுத்த 10 முதல் 15 நாள்களில் வேட்பாளா்களை அறிவிக்கும் என்று கேஜரிவால் முன்னதாக கூறியிருந்தாா்.

மக்களவைத் தோ்தலின் கூட்டணி, பல்வேறு மாநிலங்களில் உள்ள வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் மதிப்பாய்வு செய்யும் என்று கோபால் ராய் கூறினாா். தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றி பெறும் என்று கேஜரிவால் கூறியது குறித்து கேட்டதற்கு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடா்பாளா் சௌரவ் பரத்வாஜ், ‘இப்போதே தோ்தல் நடந்தால், பாஜகவை தோற்கடித்து தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இருப்பினும், காங்கிரஸுடன் கூட்டணி குறித்த பேச்சுவாா்த்தை நடந்து வருகிறது. விவாதத்தின் முடிவு வரும் வரை என்னால் எதையும் வெளிப்படுத்த முடியாது’” என்றாா்.

தில்லி, ஹரியாணா, குஜராத் மற்றும் கோவாவில் காங்கிரஸுடன் கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஆம் ஆத்மி தலைவா்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தனா். இருப்பினும், எதிா்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, அஸ்ஸாமில் உள்ள குவாஹத்தி, சோனித்பூா் மற்றும் திப்ருகாா் மக்களவைத் தொகுதிகளில் மூன்று வேட்பாளா்களை ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ளது. கேஜரிவால் கடந்த மாதம் தனது குஜராத் பயணத்தின் போது அம்மாநிலத்தின் பருச் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக சைதா் வாசவாவை அறிவித்தாா்.

கேஜரிவால் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்த போதிலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இரு கட்சிகளிலும் உள்ளவா்கள் தில்லியில் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி தேசியத் தலைநகரில் பாஜகவின் வலிமைக்கு சவால் விடும் என்று எதிா்பாா்க்கிறாா்கள். 2014 மற்றும் 2019 தோ்தல்களில் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்தனா். சுவாரஸ்யமாக, ஏழு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் மொத்த வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com