திருப்பூரில் ஊனமுற்றோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்த உதவி அளிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்த துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டிடம் திருப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்யபாமா மனு அளித்து வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தில்லியில் அமைச்சரிடம் அவர் திங்கள்கிழமை நேரில் மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் திருப்பூர் நகரம் என்பது மிகச்சிறந்த வணிகத் தலமாகும். ஆண்டுக்கு சுமார் ரூ.30ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு வசிக்கும் மக்களில் 60 சதவீதத்திற்கும் மேலானோர் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் ஆவர்.
இதனால், நகர மக்களின் நலனை கருத்தில் கொண்டு திருப்பூர் நகரத்திற்கு என ஒரு நிரந்தர உள்கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஊனமுற்றவர்களுக்கு என ஒரு சிறப்பு முகாமை மாதந்தோறும் நடத்துவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கவனிப்பிற்கென சிறப்பு சிகிச்சை அளிக்கும் விதமாக மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்தி, அதற்கான பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும். ஊனமுற்ற மக்களுக்கு என யுடிஐடிஎன்ற சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மனுவை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட், இது குறித்து பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.