தமிழகத்தில் சர்க்கரைத் தொழில் துறைக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் டி.ரத்னவேல் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் அவர் அண்மையில் முன்வைத்த கோரிக்கை: தமிழகத்தில் உள்ள சர்க்கரைத் தொழில் துறைக்கு ஊக்கத் தொகையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து ஆலைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 2.17 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே விற்பனைக்கு உள்ளது. நியாயமான மற்றும் ஆதாய விலை அளிப்பதற்கான நிலுவைத் தொகை ரூ.226. 25 கோடியாக உள்ளது. ஆகவே, சர்க்கரையை ஒரு குறிப்பிட்ட அளவு காப்பு இருப்பாக (பஃப்பர் ஸ்டாக்) உருவாக்குவது, சிக்கலில் தவிக்கும் தமிழ்நாட்டின் சர்க்கரை ஆலைகளுக்கு பயன் தருவதாக அமையாது.
தமிழ்நாட்டில் 5.80 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் நிலையில் மாநிலத்தின் பயன்பாட்டுக்கு 15 லட்சம் டன் சர்க்கரை தேவைப்படுகிறது. எனவே காப்பு இருப்பு வரம்புகளில் இருந்து மாநிலத்தின் சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சர்க்கரை அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களின் குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீடு 5.82 சதவிகிதமாக உள்ள நிலையில், தமிழக சர்க்கரை ஆலைகளைப் பொருத்தமட்டில் இது 14.16 சதவிகிதமாக உள்ளது. எனவே, இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும். நியாயமான மற்றும் ஆதாய விலைகளை வழங்குவதற்கான நிலுவைத் தொகைகளை, உயர் வட்டி விகிதங்களில் கடன் வாங்கி தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் செலுத்தி வருகின்றன. இதனால், ஒரு சிறப்பு நடவடிக்கையாக 2017-2018 காலகட்டத்துக்கான இந்தக் கடன்கள் மீதான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். சர்க்கரை தொழில் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றார் அவர்.
ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் வேண்டும்:
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் அதிமுக உறுப்பினர் கே. அசோக்குமார் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை முக்கிய விஷயங்களை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் அவர் முன்வைத்த கோரிக்கை:
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ள ராயக்கோட்டையில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தப் பகுதியைச் சுற்றிலும் வாழும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராயக்கோட்டையில் அமைந்துள்ள ரயில் நிலையத்தைப் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வருவதற்குப் பயன்படுத்தி வருகின்றனர். பெங்களூரு, ஒசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு தினந்தோறும் ராயக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளன. தற்போது மக்கள் ரயில்களில் ஏறுவதற்கு ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர், முதியவர்கள், பெண்கள் ஆகியோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் அமைந்துள்ள இரு நடைமேடை களுக்கும் இடையே ஒரு நடை மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கையை மத்திய ரயில்வே அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுமா?:
நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் துணைக் கேள்வி எழுப்பி பேசுகையில், "நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்றார்.
இதற்கு மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துப் பேசுகையில், "நல்ல சேவை வேண்டுமெனில் அதற்கு விலை கொடுக்க வேண்டும். சுங்கக் கட்டணம் இல்லாமல் விரைவு நெடுஞ்சாலைகளையும், சாலைகளையும் நம்மால் கட்ட முடியாது. ஐந்து தினங்களுக்கு முன்புகூட பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரூ.25 ஆயிரம் கோடிக்கான அவ்வங்கியின் காசோலையை என்னிடம் கொடுத்தார். ஏன் அவர் எங்களிடம் பணம் கொடுக்க வேண்டும்? நம்பகத்தன்மை அதிகமாக இருப்பதே அதற்குக் காரணம். எங்களது தரவரிசை "ஏஏஏ' என உள்ளது. அந்தப் பணத்தில் சாலை அமைக்க வேண்டும். அந்தப் பணத்தை சுங்கக் கட்டணம் மூலம் எடுக்க வேண்டும். வேறு வழியில்லை. இதனால், சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய முடியாது' என்றார்.