தில்லியில் உள்ள சிறுமிகள், பெண்கள், காப்பகங்களில் இன்னும் மூன்று மாதத்தில் முழுமையாகத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என தில்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லியில் உள்ள சிறுமிகள், பெண்கள் காப்பகங்களில் பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதாக தொடர்ச்சியாகப் புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள சில காப்பகங்களில் மகளிர் ஆணையம் திடீர் சோதனை நடத்தியது. இந்நிலையில், தில்லியில் உள்ள அனைத்து பெண்கள் காப்பகங்களையும் தணிக்கை செய்யும் வகையில் தில்லி மகளிர் ஆணையத்தால் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள், மனவள ஆலோசகர்கள், சமூக சேவையாளர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழு தில்லியில் உள்ள அரசு, தனியார் சிறுமிகள் மற்றும் பெண்கள் காப்பகங்களில் விரிவாகத் தணிக்கை செய்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். ஆய்வின் போது இக்குழுவினர் காப்பகங்களில் உள்ள சிறுமிகள், பெண்களின் கருத்துக்களையும் கேட்டறிவர். இதேபோல நிபுணர் குழு அமைக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள காப்பகங்கள் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.