தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கமும், முத்தமிழ்ப் பேரவையும் இரங்கல் தெரிவித்துள்ளன.
தமிழ்ச் சங்கம் சார்பில் அதன் தலைவர் இந்து பாலா, பொதுச் செயலர் இரா.முகுந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் உலகம் முழுவதற்கும் ஒரு பேரிடியாக இறங்கியுள்ளது. தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் நீண்ட நெடியது. அவர் பல்வேறு வகையில் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் உதவி, ஆதரவளித்துள்ளார்.
அவர் தில்லி தமிழ்ச் சங்க கட்டடத்தை திறந்து வைத்து சங்கத்தின் அடித்தளத்தை திடமாக அமைத்துக் கொடுத்தவர். முத்தமிழ் நிகழ்வுகள் பலவற்றை அரங்கேற்றி வரும் திருவள்ளுவர் கலையரங்கத்தை அவர்தான் தொடங்கி வைத்தார். சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து மாபெரும் உதவி செய்தார். நவீன காலத்திற்கேற்ப சங்கப் பணிகளை உலகறியச் செய்ய சங்க வலைதளத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் முன்னிலையில் அவர் தொடக்கி வைத்தார். திருவள்ளுவர் சிலை மாற்றி அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவும் அவரது கையாலேயே நடந்தது. தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்ச் சங்கம் ஆற்றிய பங்கையும், ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட போது, தில்லி தமிழ்ச் சங்கம் ஆற்றிய பணிகளையும் பெரிதும் பாராட்டியவர் கருணாநிதி.
தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு மாபெரும் ஆதரவாகவும், உதவும் தூணாக இருந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்னாரது மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முத்தமிழ்ப் பேரவை இரங்கல்: கருணாநிதி மறைவுக்கு தில்லி முத்தமிழ் பேரவை இரங்கலைத் தெரிவித்துள்ளது. பேரவையின் சார்பில் அதன் தலைவர் சரோஜா வைத்தியநாதன், பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, திராவிட இயக்கத்தை சுமார் 50 ஆண்டு காலம் கட்டிக்காத்த பெருமைக்குரியவர். 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அவர், பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர், இயக்குநர், இலக்கியவாதியாவார். தமிழ் மொழி மேல் மிகுந்த பற்றுக் கொண்ட அவரது மறைவு தில்லிவாழ் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரது மறைவு தமிழ் மொழிக்குப் பேரிழப்பாகும். அன்னாரது மறைவுக்கு முத்தமிழ் பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும்,கருணாநிதியின் மறைவுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து, நாளெல்லாம் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த அபூர்வ உழைப்பாளி கருணாநிதி. கருணாநிதி ஒரு சரித்தரமல்ல....சகாப்தம்' என்று தெரிவித்துள்ளார்.
தருண் விஜய் இரங்கல்
சமூக நீதிக்கான போராட்டத்துக்கு வித்திட்டவர் கருணாநிதி. தமிழுக்கும், திருவள்ளுவரின் படைப்புகளுக்கும் ஆதரவாக நான் மாநிலங்களவையில் பேசியபோது, அவர் ஆதரவு தெரிவித்தார்.
கவிஞராகவும், இலக்கியராகவும், திருவள்ளுவரின் கொள்கைகளையும் பின்பற்றி வாழ்ந்தவர் கருணாநிதி. திருக்குறள், தமிழண்ணை ஆகியவற்றின் மீது அவர் வைத்திருந்த பற்று எனக்கு நீங்கா நினைவுகளாக உள்ளன. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை வெற்றிகரமாக அமைத்ததற்கு முதல் வாழ்த்து தெரிவித்தவர் மு.க. ஸ்டாலின். அதையும் என்னால் மறக்க முடியாது.
இமயமலையின் பகுதியில் இருந்து கருணாநிதிக்கு எனது இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.