தில்லியில் துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் - லாஜ்பத் நகர் இடையேயான வழித்தடத்தில் பயணிகளுக்கான ரயில் சேவை திங்கள்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டு வசதி துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.
தில்லியின் முக்கியப் போக்குவரத்து அமைப்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) திகழ்ந்து வருகிறது. தில்லியின் பல்வேறு பகுதிகளுக்கும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளான காஜியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் சேவையை அளித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து வருகின்றனர்.
ஏற்கெனவே தில்லி மற்றும் என்சிஆர் பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது மூன்றாவது கட்டமாக பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சில வழித்தடங்களில் ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், பிங்க் லைன் வழித்தடத்தில் லாஜ்பத் நகர் மற்றும் துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் மெட்ரோ ரயில் நிலையங்கள் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் (சிஎம்ஆர்எஸ்) அனுமதி அளித்தார். இதையடுத்து, 8.10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தில்லி முதல்வர் கேஜரிவால் ஆகியோர் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஷி ஹிராமத்ஷு, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் மங்கு சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசுகையில், "மிக உன்னத நோக்கத்துடன் மெட்ரோ நிறுவனம் ரயில் சேவையை அளித்து வருகிறது. மக்களுக்கு திறன்மிக்க, பசுமைப் போக்குவரத்தை அளித்து வருகிறது' என்றார்.
முதல்வர் கேஜரிவால் பேசுகையில், "இந்த தருணம், தில்லி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாகும். இந்த வழித்தடநி நகரின் முக்கிய சந்தைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த சந்தைப் பகுதிகளில் இருந்து வரும் வாகன நிறுத்துமிடப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்' என்றார்.
இந்த வழித்தடத்தில் இரண்டு இடைமறி சந்திப்பு ரயில் நிலையங்கள் உள்பட 6 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஐஎன்ஏ மெட்ரோ ரயில் நிலையம் எல்லோ லைன் வழித்தடத்தை இணைக்கும் வகையில் லாஜ்பத் நகர் ரயில் நிலையத்தில் இருந்து கஷ்மீரி கேட் மற்றும் எஸ்கார்ட்ஸ் முஜேசர் இடையிலான வழித்தடத்தில் பயணிகள் மாறிச் செல்ல முடியும்.
மூன்றாம் கட்ட ரயில்வே திட்டத்தில் மஜ்லிஸ் பார்க் - ஷிவ் விஹார் இடையேயான 59 கிலோ மீட்டர் தூர ரயில் வழித்தடத்தில் துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் மற்றும் லாஜ்பத் நகர் வழித்தடப் பிரிவு 8.10 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த வழித்தடம் சரோஜினி நகர் , ஐஎன்ஏ, சௌத் எக்ஸ்டென்ஷன் மற்றும் லாஜ்பத் நகர் போன்ற நான்கு முக்கியச் சந்தைகள் அமைந்துள்ள பகுதியாகும். இந்தப் புதிய வழித்தடம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பு, 214 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் 296 கிலோ மீட்டர் தூரமாக உயர்ந்துள்ளது.
2018-ஆம் ஆண்டில் மட்டும் தில்லி மெட்ரோவானது 57 கிலோ மீட்டர் தூரத்திற்கான புதிய வழித்தடங்களைத் திறந்திருக்கிறது. துர்காபாய் தேஷ்முக் சௌத் கேம்பஸ் மற்றும் லாஜ்பத் நகர் வழித்தடத்தில் ஆறு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 5 ரயில் நிலையங்கள் தரைக்கு அடியிலும், ஒரு ரயில் நிலையம் தரைக்கு மேல் மட்டத்திலும் அமையப் பெற்றுள்ளன. இவை முறையே சர் விஷ்வேஷ்வரய்யா மோதி பாக், பிகாஜி காமா பிளேஸ், சரோஜினி நகர், ஐஎன்ஏ, சௌத் எக்ஸ்டென்ஸன், லாஜ்பத் நகர் ஆகியவை ஆகும்.