மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை 2018, மே 27-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஆனால், அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து
மதுரையைச் சேர்ந்த லயோனல் அந்தோணிராஜ் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான சீனிவாசன் மீது நடத்தப்பட்டதாக்குதல் தொடர்பாக மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில், பல்கலை. துணைவேந்தர் செல்லதுரை உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருந்து வருகிறது. பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத செல்லதுரை, துணை வேந்தராக நியமிக்கப்பட்டது விதிகளுக்குப் புறம்பானது. அவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டது சட்ட விரோதமானது. பல்கலை. காலிப் பணியிடங்களை துணைவேந்தர் செல்லதுரை தன்னிச்சையாக நிரப்பி வருகிறார். எனவே, அவரது நியமனத்தை ரத்து செய்வதுடன், புதிதாக எந்தவொரு பணியிடங்களையும் நிரப்பத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை காமராஜர் பல்கலை.யின் துணை வேந்தர் பி.பி.செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்து கடந்த ஜூன் 14-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து செல்லதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, "துணை வேந்தரை நியமனம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால், அடுத்த விசாரணை நடைபெறும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை எவ்வித நியமன உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரர் செல்லதுரை சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, "இந்த வழக்கில் வாதாடுவதற்கு நேரம் இல்லாததால், வழக்கு விசாரணையை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 13), பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.