தமிழக அரசு கோரியுள்ள வறட்சி நிவாரண நிதி ரூ.39,565 கோடியை விரைந்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2018-19ஆம் ஆண்டுக்கான துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் பங்கேற்றுப் பேசியதாவது: இந்த துணை மானியக் கோரிக்கையில் முதலாவது கட்டமாக 65 மானியக் கோரிக்கைகளுக்கு கூடுதலாக ரூ.11,697.92 கோடி வழங்க அவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.பொதுவாக, துணை மானியக் கோரிக்கையில் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்ட செலவினங்களுக்கு மேல் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய அவையில் ஒப்புதல் பெற வேண்டும்.
இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டித் தரும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதில் சுணக்கம் காட்டுவது வருத்தமளிக்கிறது. தமிழ்நாடு கடந்த 2015, டிசம்பரில் வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிப்படைந்தது. அதன் பின் அடுத்தடுத்து நிகழ்ந்த "வார்தா' , "ஒக்கி' புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு கோரிய நிவாரணத் தொகையை தராமல், மத்திய அரசு மிகச் சொற்ப நிதியை மட்டுமே வழங்கியுள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரு ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 16,682 வருவாய்க் கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வறட்சி நிவாரண நிதியாக ரூ. 39,565 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், இதுவரை அதற்கான நிதி வழங்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்நிதியை முழுமையாக வழங்க வேண்டும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரிக் கால்வாய் புனரமைப்புக்காக ரூ 11,421 கோடியையும், காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.5,166 கோடியையும், கொங்கு மண்டலத்தின் அத்தியாவசிய தேவையான அத்திக்கடவு-அவினாசி வெள்ளக் கால்வாய்த் திட்டத்திற்கு ரூ. 1,862 கோடியையும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
"ரிக்' சேவைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுமா?
மக்களவையில் செவ்வாய்க்கிழமை திருப்பூர் தொகுதி அதிமுக உறுப்பினர் வி.சத்யபாமா முன்வைத்த கோரிக்கையில், "வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பணிகளுக்காக துளையிடும் "ரிக்'பணிக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்கக்கோரி தென்மண்டல வேளாண்மைக்கான "ரிக்' உரிமையாளர்கள் சங்கத்தினர் மத்திய அமைச்சரிடம் ஏற்கெனவே வேண்டுகோள் வைத்துள்ளனர்.
எனது திருப்பூர் மக்களவைத் தொகுதியில் ரிக் பணிகளை மட்டுமே நம்பி வாழும் நூற்றுக்கணக்கான ரிக் மற்றும்ஆழ்துளைக் கிணறு துளையிடும் சேவை வழங்குவோர் உள்ளனர். இந்த தொகுதியில் சுமார் 70 சதவீதம் வேளாண்மைப்பணிகள் நிலத்தடி நீரைச் சார்ந்து இருப்பதால் வேளாண்மைக்குத் தேவையான தண்ணீரை விவசாயிகள் பெற நிலத்தடி நீர் மற்றும் 'ரிக்'சேவை வழங்குவோர் முக்கியப் பங்காற்றுகின்றனர். ரிக் பணிகளுக்கான ஜிஎஸ்டி 18 சதவிகிதமாக உள்ளது. 'ரிக்'மற்றும் போர்வெல் சேவை வழங்குவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் பல சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, வேளாண் சார்ந்த பணிகளுக்காக துளையிடும் 'ரிக்'சேவைகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றார்.