Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை:280  வார்டுகளில் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பிரச்னை:280  வார்டுகளில் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 16th June 2018 11:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் நிலவும் குடிநீர், மின் பற்றாக்குறைப் பிரச்னைக்கு உடனடியாகத்  தீர்வு காண வலியுறுத்தி 280 வார்டுகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தில்லி பாஜக அறிவித்துள்ளது.
    தில்லி அரசின் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக மேற்கொண்டு வரும் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் அலுவலகத்தில் முதல்வர் கேஜரிவால், அவரது அமைச்சரவை சகாக்கள் மூவர் உள்ளிட்டோர் கடந்த திங்கள்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    இந்நிலையில், மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வலியுறுத்தி முதல்வர் கேஜரிவால் அலுவலகத்தில் தில்லி பாஜக எம்எல்ஏக்கள் விஜேந்தர் குப்தா, மஜீந்தர் சிங் சிர்சா, ஜெகதீஷ் பிரதான்,  பர்வேஷ் வர்மா எம்.பி., ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா ஆகியோர் புதன்கிழமை தொடங்கிய தர்னா,  நான்காவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது.
    இந்நிலையில் இந்த தர்னாவை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றுவதாக ஜெகதீஷ் பிரதானைத் தவிர மற்றவர்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். இந்த உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
    இது தொடர்பாக தில்லி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கூறியதாவது: தில்லியில் நிலவும் பிரச்னைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் 6-வது நாளாகத் தொடர்ந்து ஏசி அறையில் தர்னா என்ற பெயரில் முதல்வர் ஓய்வெடுத்து வருகிறார்.
    தில்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், கடந்த 5 நாள்களில் சுமார் 2 கிலோ எடை அதிகரித்துள்ளார். தில்லியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முடியாமல், 'பிக்பாஸ்' வீட்டில் கேஜரிவால் ஒழிந்துள்ளார் என்றார் அவர்.
    280 வார்டுகளில் இன்று ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், தில்லியில் உள்ள 280 வார்டுகளிலும் தில்லி பாஜக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தில்லி  தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
    இது தொடர்பாக அவர் கூறுகையில்,  'தில்லியின் அனைத்துப்  பகுதி மக்களும்  தற்போது நிலவும் மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்  பற்றாக்குறை பிரச்னைக்கு தில்லி அரசு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தி 280 வார்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai