Enable Javscript for better performance
கேஜரிவால் 6-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்: பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி இன்று பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கேஜரிவால் 6-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்: பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி இன்று பேரணி

    By DIN  |   Published on : 16th June 2018 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் முதல்வர் கேஜரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மேற்கொண்டுள்ள உள்ளிருப்புப் போராட்டம் சனிக்கிழமை 6-ஆவது நாளாக நீடித்தது. இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இல்லம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17)  மாபெரும் பேரணிக்கு நடத்தப்படவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
    தில்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும்,  கடந்த திங்கள்கிழமை முதல் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, துணை நிலை ஆளுநர் மாளிகை வரவேற்பு அறை சோஃபாவிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இப்போராட்டம்  6-ஆவது நாளாக சனிக்கிழமையும் தொடர்ந்தது.
    மேலும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமையும்,  துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமையும் தொடங்கிய கால வரையறையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
    இன்று பேரணி: இந்நிலையில், கேஜரிவாலின் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தில்லி மண்டி ஹவுஸில் இருந்து லோக்  கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம்  நோக்கி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
    சத்ருஹன் சின்ஹா ஆதரவு: இதற்கிடையே, கேஜரிவாலின் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருஹன் சின்ஹா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது என்பது பாஜகவின்  வலுவான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இப்போது, தில்லி முதல்வர் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தர்னாவில் ஈடுபடும் போது அதை எதிர்ப்பது  ஏன்?  அகந்தையை, ஈகோவை தில்லி மக்களின் நலனுக்காகத் தள்ளி வைத்துவிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்துபவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கலாமே' என்று மறைமுகமாக பிரதமர் மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
    இதற்கிடையே, தில்லியில் அரசு அதிகாரிகளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவைத்து, தில்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு நடத்துவதாக முதல்வர் கேஜரிவால் சனிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
    ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் மறுப்பு
    தில்லியில் தாங்கள்  பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை என்றும், அடையாள மௌனப் போராட்டத்தில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம் என்றும்  ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 4 மாதங்களாக தில்லி அரசு அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தில்லி அரசு கூறுவதில் உண்மையில்லை. தலைமைச் செயலர், பிரதான செயலர், துறைத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன. தில்லி தலைமைச் செயலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தினம்தோறும் மதிய உணவு இடைவேளையில்,  5 நிமிஷங்கல் மௌனப் போராட்டத்தை  நடத்துகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai