Enable Javscript for better performance
தலைநகரில் பலாத்காரம் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேசியத் தலைநகர் தில்லியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில்  பாலியல் பலாத்காரம்,  ஆள் கடத்தல், கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பது காவல்துறையின் புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
    நிகழாண்டில் முதல் ஐந்து மாதங்களில் 207 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே ஐந்து மாதத்தில் 204 சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்திருந்தன.
    அதேபோன்று, கடந்த ஆண்டு எட்டு ஆள்கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், நிகழாண்டு ஐந்து மாதங்களில் 12 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டில் முதல்  ஐந்து மாதங்களில் 851 பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாயிருந்தன. நிகழாண்டில் இதே காலக்கட்டத்தில் 888 வழக்குகள் பதிவாகியிருப்பது காவல் துறையின் குற்றப் பிரிவு புள்ளிவிவரத் தகவலில் தெரிய வந்துள்ளது.
    மேலும், தில்லியில் நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி,  முதல் ஆள் கடத்தல் சம்பவம் நிகழ்ந்தது.  ஒரு தொழிலதிபரின் மகன் ரூ.5 கோடி  கேட்டு கடத்தப்பட்டார்.  அதன்பிறகு,  குடியரசு தினத்திற்கு முன்பு  சில மர்ம நபர்கள் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரைச் சுட்டுவிட்டு ஐந்து வயது சிறுவனைக் கடத்திச் சென்றனர். ரூ.60 லட்சம் கேட்டு மாணவரை பிடித்து வைத்திருந்தனர்.
    எனினும், கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை  கடந்த ஆண்டுடன்  ஒப்பிடுகையில் நிகழாண்டில்  ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் குறைந்து காணப்படுகிறது. கடந்த ஆண்டில் இதே காலக் கட்டத்தில் 16 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால்,  நிகழாண்டு இந்த எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது.
    அதேவேளையில் வாகனத் திருட்டுகள் அதிகரித்துள்ளன. கடந்த  ஆண்டு முதல் ஐந்து மாதங்களில்  16,197 வாகனங்கள் திருடு போயின.  நிகழாண்டு இதே காலக் கட்டத்தில் 18,157   வாகனங்கள் திருடு போயுள்ளன.  வாகனங்கள் மோதி உயிரிழப்பு எண்ணிக்கை நிகழாண்டு மே 31-ஆம் தேதி வரை 629 ஆக பதிவாகி இருந்தது.  கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 585 ஆக இருந்தது.
     ஒருபுறம் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் தீர்க்கப்படாத வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நகைக் கடையில் அதன் உரிமையாளரைக் கொன்றுவிட்டு பணத்தை  மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோன்று,  இரு வேறு நகைக் கடைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இச்சம்பவங்களில் இன்னும் துப்பு துலக்கப்படவில்லை.
    இதற்கிடையே,  குற்றச் சம்பவங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தில்லியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க தொடர்ந் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக புகார்கள் அளிப்பது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தில்லியில் 3,720 வழிப்பறிச் சம்பவங்கள் நிகழ்ந்தன. நிகழாண்டு 2,693 சம்பவங்கள்தான் நிகழ்ந்துள்ளன. அதேபோன்று,  கொள்ளைகள் 1,315-இல் இருந்து 1,158 ஆக குறைந்துள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai