Enable Javscript for better performance
தில்லியில் தமிழக முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தில்லிக்கு சனிக்கிழமை வந்தார். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் அவர் பங்கேற்க  உள்ளார்.
    முன்னதாக, சென்னையில் இருந்து சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு விமானத்தில் புறப்பட்ட  அவர், இரவு சுமார் 9 மணியளவில் தில்லி வந்தடைந்தார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோரும் வந்தனர்.
    விமான நிலையத்தில், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை,  நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் உள்ளிட்ட அதிமுக எம்பிக்கள்,  கூடுதல் தலைமைச் செயலரும், தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட  ஆணையருமான ஜஸ்பீர் சிங் பஜாஜ்,  முதன்மை உறைவிட ஆணையர் முருகானந்தம் ஆகியோர் முதல்வரை  வரவேற்றனர்.  அதைத் தொடர்ந்து, தில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அவர் தங்கினார்.
    குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார பவனில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நீதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். அவருடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனும் பங்கேற்கிறார்.
    இக்கூட்டத்தில் பல மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள்,  யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள்,  மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
    இக்கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பும் முதல்வர்,  சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு  தில்லியில் இருந்து இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார்.
    இதனிடையே,   நீதி ஆயோக் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர்களையோ அல்லது முக்கியப் பிரமுகர்களையோ முதல்வர் சந்திக்கும் திட்டம்  ஏதும் தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்று தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல  வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai