Enable Javscript for better performance
பாஜக கவுன்சிலரின் சகோதரர் கொலை: ஐவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் குடிநீர்க் குழாய் இணைப்பு தொடர்பான பிரச்னையில் பக்கத்து வீட்டுக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில்  இளைஞர் உயிரிழந்தார். அவர் பாஜக கவுன்சிலரின் சகோதரர் என போலீஸார் தெரிவித்தனர். தில்லி சங்கம் விஹாரில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    இதுகுறித்து தில்லி காவல் துறையினர் தெரிவித்ததாவது: தெற்கு தில்லி,  சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண படானா (35).  இவர் சிஆர் பார்க் வார்டு பகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் சுபாஷ் படானாவின் சகோதரர் ஆவார்.  அதே பகுதியைச் சேர்ந்தவர் பாப்லி (38).
    இந்நிலையில், தனது வீட்டுக்கு தில்லி ஜல் போர்டிலிருந்து குடிநீர் இணைப்பு பெறுவது தொடர்பாக  பாப்லியுடன் கிருஷ்ண படானா பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    அப்போது, பாப்லியும்,  அவரது குடும்பத்தினரும் கிருஷ்ண படானாவை செங்கலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது கூட்டாளிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்த பாப்லி,  கிருஷ்ண படானா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
    இச்சம்பவத்தில் கிருஷ்ண படானா,  அவரது மகன் மணீஷ் ஆகியோர் துப்பாக்கிக் குண்டுக் காயமடைந்தனர்.  குடும்பத்தினரும் காயமடைந்தனர். இதையடுத்து,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ண படானா வெள்ளிக்கிழமை சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார். பாப்லியும் காயமடைந்த நிலையில் பாத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    இச்சம்பவம் தொடர்பாக பாப்லியின் சகோதரர்கள் ககன், கன்னு,  தந்தை ராம்பத்,  உறவினர் கவிராஜ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும்  விசாரணை நடைபெற்று வருவதாக  போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai