Enable Javscript for better performance
ரூ.10 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    ரூ.10 லட்சம் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!

    By DIN  |   Published on : 16th June 2018 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி புறநகர் பகுதியில் ரூ.10 லட்சம் பணத்துடன்  வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தில்லி துவாரகா சரக போலீஸார் தெரிவித்ததாவது:
    புறநகர் தில்லி சூரக்பூர் பகுதியில் வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரம் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ள மையத்தின் பின்பகுதியில் உரிமையாளர் ஓம் பிரகாஷ் வசித்து வருகிறார்.
    இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து ஓம் பிரகாஷ் வெளியே வந்தார். அப்போது, ஏடிஎம் மையத்தின் இரும்பு ஷட்டர் பாதி அளவு திறக்கப்பட்டு, அதன் கதவுகள் சேதமடைந்திருந்ததைக் கண்டார்.  உள்ளே சென்று பார்த்த போது,  அந்த மையத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
    போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில்,  ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. தரைப் பகுதியில் ஏடிஎம் இயந்திரம் திருகாணி மூலம் இணைக்கப்பட்டிருந்ததால், அதை கொள்ளையர்கள் எளிதாக கழற்றி வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இக்கொள்ளையை மர்ம நபர்கள் 15 நிமிடங்களில் அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் போலீஸாருக்கு அளித்த தகவலில்,  அண்மையில்தான் இயந்திரத்தில் பணம் நிரப்பப்பட்டதாகவும்,  ரூ.10 லட்சம் வரை பணம் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
    இக்கொள்ளை நடந்த விதம் ஏற்கெனவே முன்ட்கா,  பஹதுர்கர் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்துடன் ஒத்துப் போவதாக உள்ளது. பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதனால்,  கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் சென்ற வாகனங்கள் குறித்த விவரமும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.  சம்பவம் குறித்து வங்கியிடமிருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.  இக்கொள்ளைச் சம்பவத்தில் வங்கி ஊழியர்களுக்கு ஏதும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai