கண்காணிப்புக் குழுவை சந்திக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு: சீலிங் நடவடிக்கை கூட்டத்தை பாஜக புறக்கணித்தது

சீலிங் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை ஆம் ஆத்மி

சீலிங் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
சீலிங் நடவடிக்கை தொடர்பாக ஆராய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தில்லி முதல்வர் திங்கள்கிழமை அழைப்பு விடுத்திருந்தார். இது தொடர்பாக தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரிக்கும், தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கனுக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார். முதல்வரின் அழைப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டது. ஆனால், "சீலிங் நடவடிக்கையில் நாடகமாடும் தில்லி அரசுடன் விவாதிக்க எதுவும் இல்லை' எனக் கூறி முதல்வரின் அழைப்பை ஏற்க பாஜக மறுத்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
 இந்நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்ற கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது. ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் கேஜரிவால், துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், மேம்பாட்டுத் துறை அமைச்சர் கோபால் ராய், ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன், அர்விந்தர் சிங் லவ்லி உள்பட மூன்று உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 
மணீஷ் சிசோடியா: இக்கூட்டம் குறித்து பின்னர் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
சீலிங் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவை சந்தித்து சீலிங் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர வற்புறுத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் மக்கள் பிரச்னைகளில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை அக்கட்சி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. தில்லி அரசு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாதது துரதிருஷ்டவசமானது. சீலிங் நடவடிக்கைகள் மூலம், தில்லியில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவதற்கான வழிமுறைகளில் பாஜக ஈடுபடுகிறது. மத்தியில் ஆளும் பாஜக நினைத்திருந்தால் சீலிங் நடவடிக்கையை எப்போதோ நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை என்றார் சிசோடியா.
அஜய் மாக்கன்: கங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் கூறியதாவது: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் தில்லியில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவதற்கான வழிமுறைகளில் பாஜக ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் எழும்புவதைத் தவிர்க்க முடியவில்லை. 
சீலிங் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே தில்லி அரசு கண்காணிப்புக் குழுவை சந்தித்துப் பேசவில்லை. இந்நிலையில், முதல்வர் கேஜரிவால் தலைமையில் கண்காணிப்புக் குழுவை சந்திக்க உள்ளோம். சீலிங் நடவடிக்கையை பாஜக  தடுத்திருக்க முடியும் என்றார் அவர்.
பாஜக சாடல்: இந்நிலையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு எவ்வாறு இயங்குகிறது என்பதை மணீஷ் சிசோடியாவும், அஜய் மாக்கனும் தெளிவாகக் கற்றுத் தெரிந்து கொண்ட பிறகு கருத்துக் கூற வேண்டும் என்று பாஜகவின் தில்லி செய்தித் தொடர்பாளர் பிரவீண் சங்கர் கபூர் தெரிவித்தார்.
 அவர் மேலும் கூறுகையில், "சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை புகுத்துவதற்காகவே சீலிங் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று மணீஷ் சிசோடியா கூறுவது அவர் வழக்கமாகப் பரப்பும் வதந்திகளில் ஒன்றாகும். ஆனால், அதை அஜய் மாக்கனும் வழிமொழிந்திருப்பது துரதிருஷ்டவசமானது. அவர்கள் இருவருமே, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து படித்து விட்டு கருத்துக் கூற வேண்டும்' என்றார்.
கேஜரிவால்:இதற்கிடையே, முதல்வர் கேஜரிவால் தனது சுட்டுரையில் "காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கூட்டம் நல்ல வகையில் நடைபெற்றது. தில்லி வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாஜகவும் கலந்து கொண்டிருக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com