Enable Javscript for better performance
எஸ்டிஎம்சி சொத்து வரி அலுவலகங்களில் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (எஸ்டிஎம்சி)  பகுதிகளில் உள்ள சொத்து வரி அலுவலகங்களில் அதன்  நிலைக்குழுத் தலைவர் புபேந்தர் குப்தா வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டார். 
     தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தத் தவறியவர்களுக்கான பொது மன்னிப்புத் திட்டத்துக்கான காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இம்மாநகராட்சிக்குள்பட்ட கிராமங்கள், நகரங்கள், அங்கீகரிக்கப்படாத காலனிகள், அங்கீகரிக்கப்பட்ட காலனிகள் ஆகியவற்றில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு வட்டியில் இருந்தும் அபராதத் தொகையில் இருந்தும் விலக்களிக்கப்படும் என மாநகராட்சி அண்மையில் தெரிவித்திருந்தது.
     மக்கள் சொத்து வரியை கட்டுவதற்கு ஏதுவாக சிறப்பு சொத்து வரி அலுவலகங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் அமைக்கப்பட்டன.  மார்ச் 29, 30 ,31 ஆகிய நாள்கள் விடுமுறை தினங்களாகும்.  இருப்பினும், அன்றைய தினங்களில் சொத்து வரி கட்டுவதற்கு ஏதுவாக சொத்து வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
    இந்நிலையில்,  இந்த சொத்து வரி அலுவலகங்களில் தெற்கு தில்லி மாநகராட்சியின் நிலைக் குழுத் தலைவர் புபேந்தர் குப்தா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.  இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:  நஜாஃப்கர் பகுதியில் உள்ள சொத்து வரி அலுவலகங்களில் அவர் ஆய்வில் ஈடுபட்டார். சொத்து வரி அலுவலகங்கள் முறையாக செயற்படுகிறதா என்பது தொடர்பாக சொத்துவரி செலுத்த வந்த மக்களிடம் அவர்  கேட்டறிந்து கொண்டார் என்றனர். 
    இதுகுறித்து புபேந்தர் குப்தா கூறுகையில்,  "தெற்கு தில்லி மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுகின்றனர். மக்கள் சொத்து வரியை செலுத்துவதை எளிதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சொத்துவரி அலுவலகங்கள் திறம்பட இயங்குகின்றன. சொத்துவரி கட்டாதவர்கள் இம்மாத இறுதிக்குள் கட்ட வேண்டும்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai