Enable Javscript for better performance
சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: தில்லியில் காங்கிரஸ், என்எஸ்யுஐ, மாணவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: தில்லியில் காங்கிரஸ், என்எஸ்யுஐ, மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ), தில்லி காங்கிரஸ் சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இதேபோல, வினாத்தாள் கசிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் அமைந்துள்ள ப்ரீத் விஹாரில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, "வினாத்தாள் கசிவுக்கு சிபிஎஸ்இ பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர். இதேபோல, நாடாளுமன்றச் சாலையில் தில்லி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    என்எஸ்யுஐ: காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்எஸ்யுஐ) சார்பில் உத்யோக் பவன் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் என்எஸ்யுஐ தலைவர் நீரஸ் மிஸ்ரா பங்கேற்றார். அவர் பேசுகையில், "நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் உயர் கல்வி நிறுவனங்களை மாஃபியாக்கள் கைப்பற்றி இருப்பதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், சிபிஎஸ்இ தலைவர் ஆகியோரின் பொறுப்பின்மையும் இந்த தேர்வு வினாத்தாள் கசிவு எடுத்துக்காட்டியுள்ளது. இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் ஆகியோர் பதவி விலக வேண்டும்' என்றார்.
    ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், "நேர்மையான விசாரணை நடைபெற சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மறுதேர்வு தேதிகளை விரைவில் அறிவிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஏபிவிபி மனு: இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மனு அளித்துள்ளது. அதில், "சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக குறித்த காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலங்களில் இதுபோன்று வினாத்தாள் கசிவு ஏற்படாத வகையில் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போட்டித் தேர்வுகளின் தேதிகளுடன் குழப்பம் ஏற்படாத வகையில், மறுதேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     


    "அனைத்து மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களுடன் விவாதிக்க வேண்டும்'
    சிபிஎஸ்இ தேர்வு வினாத் தாள் கசிந்தது தொடர்பாக அனைத்து மாநில கல்வித் துறை அமைச்சர்களையும் அழைத்து தேர்வு முறையைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
     இது தொடர்பாகஅவர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: "சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கான வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, இரு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 26 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிபிஎஸ்இ தேர்வு முறை மீது பெற்றோர்கள், குழந்தைகள், பள்ளிகள் கொண்டுள்ள புனிதத் தன்மையும் கெட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், அனைத்து மாநில கல்வித் துறை அமைச்சர்களையும் அழைத்து, தேர்வு முறையை பலப்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai