Enable Javscript for better performance
"ஆதிவாசிகள், பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு'- Dinamani

சுடச்சுட

    

    "ஆதிவாசிகள், பாரம்பரிய கைவினைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு'

    By DIN  |   Published on : 18th May 2018 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதிவாசிகள், கிராமியக் கலைஞர்கள், பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சில் (ஐசிசிஆர்) அமைப்பின் தலைவர் வினய் சகஸ்ர புத்தே தெரிவித்தார்.
    தில்லி ஐசிசிஆர் தலைமையகம் அமைந்துள்ள ஆசாத் பவனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உலக நாடுகளுடன் கலாசார உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தைக் கூறும் வகையில் பண்டித் தீனதயாள் உபாத்யாய் நினைவு உரை இந்த ஆண்டு தொடங்கி நடைபெறவுள்ளது. உலக கலாசார தினமான மே மாதம் 21- ஆம் தேதி, இந்த உரை தில்லி சாணக்கியபுரியில் உள்ள பிரவாசி பாரதிய கேந்திர மையத்தில் நடைபெறும். இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடக்க உரையாற்றுகிறார். இதில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 
    இந்தியாவின் கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்று அதன் மூலம் அவற்றுடன் நட்புறவில் ஈடுபடமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கலை, கலாசாரம், இசை, நடனம், யோகா உள்பட இந்தியாவின் அனைத்துக் கலாசார அம்சங்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் ஆதிவாசிகள், கிராமியக் கலைஞர்கள், பாரம்பரிய கைவினைக் கலைஞர்களை உள்ளடக்கவுள்ளோம். இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது என்றார் அவர். 
    ஐசிசிஆர் தலைமை இயக்குநர் ரிவா கங்குலி தாஸ் கூறுகையில், "அண்டை நாடுகளுடன் கலை, கலாசாரம் மூலம் நல்லுறவைப் பேணி வருகிறோம். அண்டை நாடான இலங்கையுடன் தனிப்பட்ட வகையில் பல்வேறு நல்லுறவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இலங்கையில் சிங்கள மக்களிடம் ஹிந்தி மொழி மிகப் பிரபலமாக இருந்ததை அறிந்து கொண்டோம். இப்போது ஐசிசிஆர் சார்பில் இலங்கையில் ஹிந்தி மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், ஹிந்தி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன' என்றார் அவர். பேட்டியின் ஐசிசிஆர் துணை தலைமை இயக்குநர்கள் நம்ரதா குமார், பத்மஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai