Enable Javscript for better performance
கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தவறு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது தவறு

    By DIN  |   Published on : 18th May 2018 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது மிகப் பெரிய தவறாகும்; இது ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கையாகும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா எம்.பி. கூறினார்.
    இது குறித்து தில்லியில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் எடுத்த முடிவு சரியானதல்ல. 
    அதேபோன்று, முதல்வராக பி.எஸ். எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கவும் கூடாது. இதன் மூலம் அவர் அரசியல் சட்டத்தின்படி செயல்படுகிறாரா அல்லது ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறாரா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 
    தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கை இல்லை. இந்நிலையில், அக்கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார். 
    இதனால்தான் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. அதேவேளையில், இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகப் பார்த்தால், ஆளுநரின் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது. ஜனநாயகத்தை வீழ்ச்சி அடைய செய்யக்கூடிய செயலாகும். இது கண்டனத்திற்குரியது.
    தமிழகத்தில்கூட ஆளுநரை பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. கர்நாடகத்தில் ஆளுநரையும், ஆளுநர் அலுவலகத்தையும் பாஜக தற்போது தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. இது கண்டனத்திற்குரியது. 
    இந்த விவகாரம் பல புதிய பிரச்னைகளை எழுப்பியுள்ளது. கர்நாடகத்தில் பாஜக தனிப்பெரும் கட்சி என்று நியாயப்படுத்தினால், கோவா, மணிப்பூர், பிகார் மாநிலத் தேர்தல்களில் சில கட்சிகள் தனிப்பெரும் கட்சியாக வென்ற போது இதே நிலைப்பாடு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. 
    இதனால், கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது மிகப் பெரிய தவறு. இது அரசியல் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் புறம்பானது. மேலும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விஷயமாகும். 
    அரசியல் கட்சிகள் மத்தியில் இது கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அரசியல் சட்டத்திற்கு உள்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்றார் டி.ராஜா. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai