"தில்லியில் சத் பூஜைக்காக 1,000 படித்துறைகள்'

தலைநகர் தில்லியில் சத் பூஜைக்காக 1,000 படித்துறைகள் அமைக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தில்லி அரசு தெரிவித்துள்ளது. 

தலைநகர் தில்லியில் சத் பூஜைக்காக 1,000 படித்துறைகள் அமைக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தில்லி அரசு தெரிவித்துள்ளது. 
ஐடிஓ யமுனை சத் பூஜைக்கான படித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை தில்லி வளர்ச்சித்துறை அமைச்சர் கோபால் ராய் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
தில்லியில் கடந்த ஆண்டு சத் பூஜைக்கான படித்துறைகள் சுமார் 600 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. நிகழாண்டில் 1000 இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சத் பூஜைக்காக யமுனையில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை (நவ.11) நீர் திறக்கப்படும். யமுனை கரையில் தூய்மைப் பணிகளை மாநகராட்சிகளும் மேற்கொள்ளும். அனைத்து படித்துறைகளிலும் பக்தர்களுக்கான மருத்துவ வசதிகள், கழிப்பிட, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நதியில் இறங்கி வழிபாடு நடத்தும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, நீர்வளம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர். 
இந்த ஆய்வின்போது தில்லி வளர்ச்சி கமிஷன் மத்திய மாவட்ட தலைவரும், புராரி சட்டப்பேரவை தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான சஞ்ஜீவ் ஜா, நீர்வளம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, தில்லி குடிநீர் வாரியம், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன் தில்லியில் 60 படித்துறைகள் மட்டும் இருந்ததாகவும், தற்போது 1,000 படித்துறைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும், 2017-18 நிதியாண்டில் சத் பூஜைக்காக படித்துறைகள் அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது என்றும் தில்லி அரசின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
சூரியக் கடவுளை வழிபடும் சத் பூஜை, வட மாநிலங்களில் குறிப்பாக பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பகுதியை (பூர்வாஞ்சல்) சேர்ந்த மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com