ரிசர்வ் வங்கி முன் இளைஞர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட் பங்கேற்று பேசியதாவது:
உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது முறையாக திட்டமிடவில்லை. இதுபோன்ற மிகப்பெரிய நடவடிக்கைக்கு முறையான திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். முறையான திட்டமிடல், முன்னேற்பாடுகள் ஏதுமின்றி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு சர்வதிகாரி போன்ற உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது. 
பிரதமர் நரேந்திர மோடி நாட்டை சர்வதிகாரி போல ஆட்சி செய்கிறார். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு 50-நாள்களுக்குப் பிறகு நக்ஸலிஸம், பயங்கரவாதம், கள்ள ரூபாய் போன்றவை முடிவுக்கு வரும் என பிரதமர் மோடி தெரிவித்தது என்ன ஆனது? பிரதமரின் வாக்குறுதிகளுக்கு பதில் அளிக்க வேண்டும். 
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டின் சூழல் மட்டும் பாதிக்கப்படாமல் பண மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. நாட்டின் அடித்தளமாக உள்ள நீதித்துறை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசுகையில், "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். பல்வேறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. அவை இன்னும் திறக்கப்படவில்லை. இந்நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும் நாடு மீளவில்லை. இது தொடர்பாக பிரதமர் வருத்தம் தெரிவிக்காமல், எதிர்க் கட்சிகளை குற்றம்சாட்டி வருகிறார்' என்றார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் முகுல் வாஸ்னிக் பேசுகையில், "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைப் போன்று, தேர்தலின்போதும் பிரதமர் வாக்குறுதிகள் அளித்தார். அவை என்னானது?' என்றார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர்  பூபேந்திர சிங் ஹூடா, மூத்த தலைவர் அசோக் கெலாட், சுஷ்மிதா தேவ், ஷர்மிஸ்தா முகர்ஜி ஆகியோர் ரிசர்வ் வங்கியை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தில்லி காவல் துறையினர் தடுத்து கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com