கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை  24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட போலீஸார்: தில்லி பல்கலை. மாணவி கைது

பெரும் தொகை கேட்டு கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை தில்லி காவல் துறையினர் 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

பெரும் தொகை கேட்டு கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை தில்லி காவல் துறையினர் 24 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர். மேலும், சிறுவனைக் கடத்தியதாக தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி, அவரது மைனர் சகோதரர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 
இதுகுறித்து தென் மேற்கு மாவட்டக் காவல் சரக துணை ஆணையர் தேவேந்தர் ஆர்யா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
தென் மேற்கு தில்லி, வசந்த் குஞ்ச் காவல் நிலையத்திற்கு வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக புகார் வந்தது. அதில், கிட்டோர்னியில் 3 வயது சிறுவன் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறுவனைக் கடத்திய நபர்கள் கட்செவி அஞ்சல் மூலம் பெரும் தொகை கேட்டு மிரட்டுவதாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சிறுவனை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. 
இப்படையினர் தொழில்நுட்பக் கருவிகள் துணை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கிட்டோர்னி பகுதியில் இருந்து வாட்ஸ்ஆப் மூலம் தகவல் வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் சிறுவனைக் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் தில்லி பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வரும் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என விசாரணையில் தெரியவந்தது. மேலும், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு சிறுவனைக் கடத்தியதும், இந்தக் கடத்தலுக்கு அந்தப் பெண்ணின் மைனர் சகோதரர் உதவியதும் தெரிய வந்தது. இதையடுத்து, சிறாரை பிடித்து விசாரித்து வருவதாக காவல் உயர் அதிகாரி தேவேந்தர் ஆர்யா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com