குடும்பத்தில் மூவரைக் கொன்றதாக 19 வயது மகன் கைது: இணையதள விளையாட்டுக்கு அடிமையானவர்

வசந்த் குஞ்ச் பகுதியில் புதன்கிழமை ஒரே குடும்பத்தில் மூவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்

வசந்த் குஞ்ச் பகுதியில் புதன்கிழமை ஒரே குடும்பத்தில் மூவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 19 வயது மகனான சூரஜை போலீஸார் கைது செய்தனர். "பியுபீஜி' இணையதள விளையாட்டுக்கு  அடிமையான இவர், தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்களுடன் இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வசந்த் குஞ்சில் வசித்து வந்த தந்தை மிதிலேஷ், தாய் சியா, தங்கையை புதன்கிழமை அதிகாலை சர்ணம் வர்மா எனும் அவர்களது 19 வயது மகன் சூரஜ் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சூரஜின் வாட்ஸ் ஆப் குழுவில், பெண்கள் உள்பட அவரது 10 நண்பர்கள் இருந்தனர். இவர்கள் வகுப்புகளை கட் அடித்துவிட்டு எப்படி நேரத்தை கழிப்பது என்று இந்தக் குழுவில் விவாதித்துள்ளனர். இந்தக் குழுவினருக்கு சூரஜ்தான் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். மெஹரோலியில் வாடகைக்கு அறை எடுத்து இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். பள்ளிக்கு போகாத நாள்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அறையில் தங்கி "பியுபீஜி' இணையதள விளையாட்டுகளை விளையாடுவதை அவர் வழக்கமாக வைத்துள்ளார். அந்த அறையில் ஒரு பெரிய தொலைக்காட்சியும் உள்ளது. வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள 10 பேரும் விசாரணைக்கு ஆஜராக அழைக்கப்பட்டுள்ளனர்.
12-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த சூரஜை அவரது தந்தை திட்டி வந்துள்ளார். வீட்டின் கட்டட பணிகளை மேற்பார்வை செய்ய வைத்ததே தனது தேர்வு தோல்விக்கான காரணம் என சூரஜ் நினைத்துள்ளார். குருகிராமில் சூரஜை அவரது தந்தை டிப்லோமா படிக்க வைத்துள்ளார். தனது வாழ்க்கை ரகசியங்களை பெற்றோரிடம் அவரது தங்கை புகார் அளித்து வந்ததால் சூரஜு அதிருப்தியில் இருந்துள்ளார். 
இந்நிலையில், புதன்கிழமை இரவு தனது பெற்றோருடன் சாதாரணமாக அமர்ந்து திருமண ஆல்பத்தை சூரஜ் பார்த்துள்ளார். பின்னர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து தந்தையை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். சப்தம் கேட்டு எழுந்த தாயையும் கத்தியால் குத்திவிட்டு, தங்கை அறைக்கு சென்று அவரை தாக்கியுள்ளார். காயத்துடன் மகளைக் காப்பாற்ற வந்த தாயை மீண்டும் தாக்கியுள்ளார் சூரஜ். பின்னர் வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருள்களை திருடிவிட்டு, கத்தியில் இருந்த கைரேகைகளை அழித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ளவர்களைக் கூப்பிட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றதைப்போல் கூறியுள்ளார். 
கைது செய்யப்பட்டதில் இருந்து "என்னை சட்டத்தின்பிடியில் இருந்து காப்பாற்றிவிடுங்கள்' என்று மட்டும் சூரஜ் கூறிவருகிறார். அவரது பெற்றோரின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சூரஜ் இறுதி அஞ்சலி செலுத்த அனுப்புமாறு அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் முறையிடவில்லை. 
சூரஜ் அமைதியானவன் என்றுதான் தாங்கள் கருதியதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் சுதந்திரதினத்தன்று சூரஜ் பட்டம் விடுவதற்கு அவரது பெற்றோர் தடை விதித்திருந்தினர். அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற செயலில் சூரஜ் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com