கேரளத்துக்கு 102 எம்பிக்கள் ரூ.43.67 கோடி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 102 பேர் தங்களது நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மொத்தம் ரூ.43.67 கோடி வழங்கியுள்ளனர்.இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று எம்பிக்களும் அடங்குவர்.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் மூலம் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகத்தின் கீழ் உள்ள நாடாளுமன்ற உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டத்தின் புள்ளிவிவரத் தகவலின்படி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து அக்டோபர் 8-ஆம் தேதி வரையிலான காலம் வரை 102 எம்.பி.க்கள் ரூ.43.67 கோடி வழங்கியுள்ளனர்.
இவர்களில் மாநிலங்களவையின் 56 உறுப்பினர்கள் மூலம் ரூ.29.57 கோடி, மக்களவையின் 46 உறுப்பினர்கள் மூலம் ரூ.14.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 30 எம்.பி.க்கள் தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளனர். 
11 எம்.பி.க்கள் தலா ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேலான தொகையும், 14 எம்.பி.க்கள் தலா ரூ.14 லட்சமும் வழங்கியுள்ளனர். இதர எம்பிக்கள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கும் குறைவான தொகையை வழங்கியுள்ளனர். 
எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதி வழிகாட்டுதல் நெறிகளின்படி, ஒரு எம்.பி. தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, கடுமையான பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிகபட்சம் ரூ.1 கோடி வரை நிதி வழங்க முடியும். நிதி வழங்கிய எம்.பி.க்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். 
தமிழ்நாடு, தில்லி, இமாசல பிரதேசம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 3 எம்.பி.க்கள் நிதி வழங்கியுள்ளதாக அந்த புள்ளி விவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் ரூ.1 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ரூ.25 லட்சம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் ரூ.15 லட்சம் வீதம் கேரளத்திற்கு நிதியுதவி அளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com