பருவநிலை மாற்றம் மீதான செயல் திட்டம்: தில்லி அரசு விளக்கமளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பருவநிலை மாற்றம் மீதான மாநில செயல் திட்டத்தில் (எஸ்ஏபிசிசி) தில்லி ஆம் ஆத்மி அரசு

பருவநிலை மாற்றம் மீதான மாநில செயல் திட்டத்தில் (எஸ்ஏபிசிசி) தில்லி ஆம் ஆத்மி அரசு செய்துள்ள முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தில்லியில் உள்ள சுற்றுச்சூழல் துறையின் அதிகாரிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இது தொடர்பான விவகாரத்தை விசாரித்த ரகுவேந்திரா எஸ் ரத்தோர், நிபுணத்துவ உறுப்பினர் சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய பசுமைத் தீர்ப்பாய அமர்வு, சுற்றுச்சூழல் துறையின் சம்பந்தபட்ட மூத்த விஞ்ஞானி அல்லது துணைச் செயலர் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டது.
இது தொடர்பாக தீர்ப்பாய அமர்வு பிறப்பித்த உத்தரவில், "2016, செப்டம்பரில் வரைவு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது. எனினும், செயல் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக புதிய விவரம் ஏதும் தில்லி அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அளிக்கவில்லை. 
ஆகவே, தில்லி அரசு உத்தேசித்துள்ள திருத்தங்கள் தொடர்பான தகவலை தீர்ப்பாயத்தில் அளிக்கும் பொருட்டு, தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறையின் மூத்த விஞ்ஞானி அல்லது துணைச் செயலர் அடுத்த விசாரணை நடைபெறும் தேதியன்று தீர்ப்பாயத்தில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. அப்போது, பருவநிலைல மாற்றத்தின் செயல் திட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள் குறித்த முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பான வழக்கில் எஸ்ஏபிசிசியில் திருத்தங்கள் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில், "எஸ்ஏபிசிசியை சமர்ப்பிக்குமாறு தில்லி அரசிடம் ஜனவரி, 2010-இல் இருந்து மூன்று முறை கோரப்பட்டது. ஆனால், இதுவரை எஸ்ஏபிசிசி சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால், செயல் திட்டத்தை சமர்ப்பிக்க தில்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 
பின்னணி: இந்த விவகாரம் தொடர்பாக விஞ்ஞானி மகேந்திர பாண்டே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பருவநிலை மாற்றம் மீதான தேசிய செயல் திட்டம் போன்று,  மாநில செயல் திட்டத்தை (எஸ்ஏபிசிசி) வரைவு செய்து, இறுதிப்படுத்தி அமல்படுத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தப்பட்டியிருந்தது. 
மேலும், இந்தத் திட்டத்தை உருவாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பான உரிய ஆவணங்களை தில்லி அரசு தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் காரணமாக தேசியத் தலைநகர் தில்லி பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான முந்தைய விசாரணையின் போது தீர்ப்பாயத்தில் தில்லி அரசின் சார்பில், "2009-இல் தேசியத் தலைநகருக்கான பருவநிலை மாற்ற நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டது. 
ஆனால், அந்த நிகழ்ச்சி நிரல் 2012-இல் காலாவதியாகிவிட்டதாகவும், அப்போதில் இருந்து தில்லி அரசிடம் பருவநிலை மாற்றம் மீதான செயல் திட்டம் ஏதும் இல்லை எனவும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், "தில்லியில் தினமும் 800 மில்லியன் டன் குப்பைகள் உருவாக்கப்படுவதாகவும், இந்தத் திடக் கழிவு குப்பைகள் அதிகளவு குவிந்துள்ள மூன்று கிடங்குகளில் கொட்டப்பட்டு வருவதாகவும், காற்றின் தரம் விஷயத்தில் பிரதிவாதிகள் சமாதானம் ஆகிவிடுவதால், இறுதியில் பருவகால மாற்றத்திற்கு அவை காரணமாகிவிடுகின்றன' என்று மனுதாரர் மகேந்திர பாண்டே தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com