எரியாத தெருவிளக்குகள்:  அதிகாரிகள் கள ஆய்வுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

தலைநகர் தில்லியில் சாலைகளில் தெருவிளக்குகள் எரியாத பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில்

தலைநகர் தில்லியில் சாலைகளில் தெருவிளக்குகள் எரியாத பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில், தினமும் இரவு 9 முதல் 10 மணி வரை அதிகாரிகள் கள ஆய்வு நடத்த தில்லி அரசின் பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த உத்தரவு, அண்மையில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உமேஷ் சந்திர மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்டது.
தலைநகரில், தில்லி பொதுபணித் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 1,260 கி.மீ. சாலைகள் உள்ளன. மேலும், மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சாலைகள் உள்ளன. 
இந்நிலையில், பல்வேறு சாலைகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்று அரசுக்கு ஏராளமான புகார்கள் வரப்பெற்றன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித் துறை, மின்சாரம், குடிநீர் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அப்போது, தெருவிளக்குகள் குறித்த புகார்கள் உள்ள பகுதிகளின் பட்டியல் முதலில் தயாரிக்க வேண்டும் எனவும், தில்லி பொதுப் பணித் துறையின் கீழ் செயல்
படும் சாலைகளில் தெருவிளக்குகள் இரவு நேரங்களில் செயல்படுவதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. 
மேலும், ஏற்கெனவே இதுபோன்ற புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட கள ஆய்வுக் குழுக்கள், பராமரிப்பு வேன்
களுடன் சென்று அனைத்து சாலைகளிலும் இரவு 9 முதல் 10 மணி வரையிலும் ஆய்வு நடத்த  உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு அனைத்து கள ஆய்வு குழுக்களுக்கும் அளிக்கப்பட்டதை அனைத்து பராமரிப்பு மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்களும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், ஒவ்வொறு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக புகார்களை கையாள்வதற்கு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அவர்கள் அந்தந்த தொகுதியில் நிலவும் பிரச்னைகள் தொடர்பாக  எம்எல்ஏக்களுடன்  கலந்து பேச வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்ப்டடது.
தங்கள் பகுதிக்கு மின்சாரம், குடிநீர் தொடர்பாக பொதுமக்களின்  புகார்களைக்  கையாளுவதற்கு வசதியாக தொகுதி வாரியாக தொடர்பு அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழிகள் ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com