"மீ டூ' இயக்கத்துக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான பிரசாரமாக முன்னெடுக்கப்படும் "மீ டூ' (நானும் பாதிக்கப்பட்டேன்)

பாலியல் குற்றங்களுக்கு எதிரான பிரசாரமாக முன்னெடுக்கப்படும் "மீ டூ' (நானும் பாதிக்கப்பட்டேன்) இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தில்லியில் பத்திரிகையாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையான வகையில் அமல்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஊடகத் துறையில் பணியாற்றியபோது பெண் பத்திரிகையாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலக வேண்டும் என்றும், இதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பத்திரிகையாளர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, போராட்டத்தின்போது மத்திய அமைச்சர் அக்பருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
இந்திய பெண் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான டி.கே.ராஜலெட்சுமி இதுகுறித்துப் பேசுகையில், ""தாங்கள் சந்தித்த பாலியல் பிரச்னைகளை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியுள்ள பெண் பத்திரிகையாளர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு நிறைய தைரியம் வேண்டும்'' என்றார்.
இதற்கிடையே,  பாலியல் குற்றங்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அதில், தங்களின் சகப் பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆகியோரால் பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து தைரியமாக குற்றம்சாட்டியுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மீ டூ இயக்கத்துக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com