வருமான வரிச்சோதனை: கைலாஷை பதவி நீக்க பாஜக வலியுறுத்தல்

வரி ஏய்ப்பு புகார் விவகாரத்தில் தில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை  பதவி நீக்க வேண்டும் என்று முதல்வர்

வரி ஏய்ப்பு புகார் விவகாரத்தில் தில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டை  பதவி நீக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார். 
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
தில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ரூ.120 கோடி அளவுக்கு வரி எய்ப்பு செய்தது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற வரி எய்ப்பு புகார் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தார்மிகப் பொறுப்பேற்று ஊழல் குற்றம்சாட்டுக்குள்ளான அமைச்சர்கள் கைலாஷ் கெலாட், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை பதவியிலிருந்து  முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நீக்க வேண்டும் என்று மனோஜ் திவாரி கூறினார். 
தில்லி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: 
பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், "தில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டால் போக்குவரத்துத் துறையில் நேரடியாக நியமிக்கப்பட்டவர் சுதித்யா சின்ஹா. இவர் நஜஃப்கர் தொகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களை மறு உருவாக்கம் செய்யும்  பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது நிறுவனம் அமைச்சரின் நிறுவனத்துடன் வியாபார பங்குதாரராக உள்ளது. இவ்வாறு இருக்கும் போது, சுதித்யா சின்ஹா எவ்வாறு தில்லி அரசுத் துறையில்  நியமிக்கப்பட்டார். 
கைலாஷ் கெலாட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகவும் உள்ள அவரை வருமான வரித் துறையினர் விசாரித்துள்ளனர். இந்த நியமனம் விதிகளை மீறியதாக அமையாதா? என்பது குறித்து  தில்லி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com