கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த 5 பேர் உயிரிழப்பு: விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவு

மேற்கு தில்லியில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 5 பணியாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

மேற்கு தில்லியில் கழிவு நீர்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 5 பணியாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தில்லி அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கோபால் ராயின் செயலர் விவேக் குமார் திரிபாதி தொழிலாளர் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேற்கு தில்லி, மோதி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு சொஸேட்டியில் உள்ள கழிவுநீர்த் தொட்டியில் பராமரிப்புப் பணிகளுக்காக அங்குள்ள பணியாளர்கள் ஐந்து பேர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சென்றனர். அப்போது, மூச்சுத் திணறி மயங்கினர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவர்களுக்கு விஷ வாயு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் ஐந்து பேரும் இறந்தனர். விசாரணையில் இறந்தவர்கள் சர்ஃப்ராஸ், பங்கஜ், ராஜா, உமேஷ், விஷால் ஆகியோர் எனத் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது:
மோதி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்ய சென்றபோது 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி மயக்கமுற்றனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். 
ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி மூன்று நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் ஆணையருக்கு தில்லி தொழிலாளர் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக தொழிலாளர் ஆணையருக்கு அமைச்சர் கோபால் ராயின் செயலர் விவேக் குமார் திரிபாதி எழுதியுள்ள கடிதத்தில் "மோதி நகரில் உள்ள டிஎல்எஃப் கிரீன் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது தொழிலாளர்கள் ஐந்து பேர் இறந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என அமைச்சர் விரும்புகிறார். மேலும், இந்த நிகழ்வுக்கு காரணமான நிறுவனத்தினர் அல்லது முகமைகளுக்கு எதிராக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதால் இந்த விசாரணை தேவைப்படுகிறது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி தெரிவித்தார். 
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை: 5 பேர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் குழுவினர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அந்த ஆணையம், தில்லி காவல் துறை ஆணையர், தில்லி தலைமைச் செயலர், தில்லி ஜல் போர்ட் தலைமைச் செயல் அதிகாரி, வடக்கு தில்லி ஆட்சியர், வடக்கு தில்லி மாவட்ட காவர் துறை துணை ஆணையர், டிஎல்எஃப் தலைவர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில் ஆணையத்தின் குழுவினர் விசாரணை நடத்தும்போது சம்பவ இடத்தில் இவர்கள் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com