முழு அடைப்புப் போராட்டம்: தில்லியில் பலத்த பாதுகாப்பு; சில இடங்களில் போக்குவரத்து நெரிசல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாரத் பந்த் எனப்படும் நாடு மழுவதும் முழு அடைப்புப் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாரத் பந்த் எனப்படும் நாடு மழுவதும் முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  தலைநகர் தில்லியில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. பேருந்துகளைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக சில மாணவர்கள் தெரிவித்தனர்.
அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கியதாக டிடிசி அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லி தலைமைச் செயலகத்தில் பணிகள் ஏதும் பாதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
தில்லியில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக தில்லி காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
மத்திய துணை ராணுவப் படையினர் உள்பட தில்லி போலீஸாரும் திங்கள்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மோட்டார் சைக்கிள்களிலும் போலீஸார் ரோந்து பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். பெட்ரோல் பங்குகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் தரியாகஞ்ச், ராம்லீலா மைதான் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கார் கேப் நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை உயர்த்தின என்றார்.
காங்கிரஸ் கட்சியினர் ராம்லீலா மைதானில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் சஞ்சய் சிங், மனோஜ் ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் காங்கிரஸார் மீது தடியடி: தில்லி கேட் அருகே சைக்கிள் ரிக்ஷாக்களில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர் மீது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இளைஞர் காங்கிரஸின் தேசிய தலைவர் கேஷவ் யாத் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் தில்லி கேட் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து தொடங்கியது. பின்னர் ஐடிஓ நோக்கி இந்த ஆர்ப்பாட்டம் வந்தபோது போலீஸார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர்.
 இதுகுறித்து இளைஞர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் அம்ரீஷ் ராஜன் பாண்டே கூறுகையில், "தில்லி கேட்டில் இருந்து ஐடிஓவை நோக்கி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியாக சென்றனர். ஆனால் எங்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவர் ஸ்ரீநிவாஸ், சர்வேஷ் திவாரி, முகேஷ் ராய், ஹைதர் அப்பாஸ் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக ஜி.பி. பண்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றோம். ஆர்ப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களையும் போலீஸார் உடைந்தனர்' என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறுகையில், "தில்லி கேட் அருகே வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பு வேலிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து முன்னேற முற்பட்டபோது அவர்கள் கலைக்கப்பட்டார்கள்' என்றார்.


மத்திய அரசுக்கு எதிர்ப்பு அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் திலீப் பாண்டே பங்கேற்று பேசியதாவது: 
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஊழல் ஆகியவற்றால் பொது மக்கள் பாதிக்கப்படும்போது எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்கமாட்டார்கள் என்றார்.

ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல்
தில்லி காங்கிரஸார் நகரின் பல்வேறு பெட்ரோல் பங்குகள் முன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ராஜேந்திர பிளேஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு முன் தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக் கன், மாட்டு வண்டியை ஓட்டி எதிர்ப்பைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மக்கள் பயனடைவார்கள்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com