ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு: 2 பேருக்கு தூக்கு; ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ஹைதராபாத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகள்  தொடர்பான வழக்கில், இந்தியன்

ஹைதராபாத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புகள்  தொடர்பான வழக்கில், இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள பிரபல கோகுல் சாட் உணவகத்திலும், லும்பினி பார்க்கில் உள்ள திறந்தவெளி திரையரங்கிலும் கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இந்த பயங்கரத் தாக்குதலில் பொது மக்கள் 44 பேர் பலியாகினர். மேலும் 68 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.
தில்சுக்நகரில் உள்ள பாலத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு வெடிகுண்டு போலீஸாரால் கண்டுபிடித்து செயலிழக்கம் செய்யப்பட்டது. இதனால் அங்கு நேரிட இருந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இந்த இரட்டை குண்டுவெடிப்புகள் தொடர்பாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இந்தியன் முஜாஹிதீன்  பயங்கரவாதிகள் ஃபரூக் ஷர்புதீன் தர்காஷ், முகம்மது சாதிக் இஸ்ரார் அகமது ஷேக், அனீக் ஷபீக் சயீது, முகம்மது அக்பர் இஸ்மாயில் சௌதரி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தில்லி உள்ளிட்ட இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்த தாரிக் அஞ்சம் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக  ஹைதராபாத் 2-ஆவது கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்  நடைபெற்ற வழக்கு விசாரணை கடந்த மாதம் 27-ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நீதிபதி டி. ஸ்ரீநிவாச ராவ் (பொறுப்பு) தனது தீர்ப்பை கடந்த 4-ஆம் தேதி வெளியிட்டார். அப்போது அவர், அனீக் ஷபீக் சயீது, முகம்மது அக்பர் இஸ்மாயில் சௌதரி ஆகிய 2 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தார். 2 பேருக்கான தண்டனை விவரமும், தாரிக் அஞ்சம் மீதான வழக்கு மீதான தீர்ப்பும் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
அதேநேரத்தில், ஃபரூக் ஷர்புதீன் தர்காஷ், முகம்மது சாதிக் இஸ்ரார் அகமது ஷேக் ஆகிய 2 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், அவர்களை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில்,  தாரிக் அஞ்சம் மீதான வழக்கில் ஹைதராபாத் 2-ஆவது கூடுதல் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.ஸ்ரீநிவாச ராவ் (பொறுப்பு) தனது தீர்ப்பை திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது தாரிக் அஞ்சத்தை குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அனீக் ஷபீக் சயீது, முகம்மது அக்பர் இஸ்மாயில் சௌதரி, தாரிக் அஞ்சம் ஆகிய 3 பேருக்கான தண்டனை விவரங்களையும் நீதிபதி டி.ஸ்ரீநிவாச ராவ் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், "அனீக் ஷபீக் சயீது, முகம்மது அக்பர் இஸ்மாயில் சௌதரி ஆகியோர் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302ஆவது பிரிவு (கொலை), இதே சட்டத்தின் பிற பிரிவுகள் மற்றும் தீவிரவாத தடுப்பு சட்டம், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ்  குற்றமிழைத்திருப்பது உறுதியாகியுள்ளது. ஆதலால், இருவருக்கும் தூக்கு தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியோருக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து தந்த தாரிக் அஞ்சத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது' என்றார்.
இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடகத்தை சேர்ந்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயங்கரவாதிகள் ரியாஸ் பத்கல், அவரது சகோதரர் இக்பால், அமீர் ரேஷா கான் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் பாகிஸ்தானில் தற்போது தஞ்சமடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்த மூவரும் பிடிபட்டதும், அவர்களுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படும் என்று அரசு வழக்குரைஞர் கே. சுரேந்தர் தெரிவித்தார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com