வீட்டுக்கே சென்று அரசு சேவைகள் வழங்கும் திட்டம்: இரண்டாம் நாளில் 13 ஆயிரம் அழைப்புகளுக்கு இணைப்பு

வீட்டுக்கே சென்று அரசு சேவைகள் வழங்கும் திட்டத்தில் சேவைகளைப் பெறுவதற்காக திட்டம் தொடங்கப்பட்ட

வீட்டுக்கே சென்று அரசு சேவைகள் வழங்கும் திட்டத்தில் சேவைகளைப் பெறுவதற்காக திட்டம் தொடங்கப்பட்ட 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 13 ஆயிரம் அழைப்புகளுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தலைநகரில் வாழும் மக்களுக்கு அரசின் பல்வேறு சேவைகளை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின்கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, திருமணப் பதிவுச்சான்று உள்பட 40 அரசின் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமையன்று அரசின் சேவைகளை அளிக்கும் திட்டத்தின் உதவி எண்ணுக்கு (1076) சுமார் 21 ஆயிரம் அழைப்புகள் வந்த நிலையில், 2,728 அழைப்புகளுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டதாகவும், அதில் 1,286 அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி அரசின் உயர் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் 13,783 அழைப்புகளுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தில்லி அரசின் உயர் அதிகாரி தெரிவித்திருப்பதாவது: 
மொத்தம் 13,783 அழைப்புகளுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டது. இவற்றில் 4,758 அழைப்புகளுக்கு கால் சென்டரின் பிரதிநிதிகள் பதில் அளித்தனர். மற்ற அழைப்புகள்காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்குப் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. பதில் அளிக்கப்படாத அழைப்புகள் 8,101-க்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டது. வீட்டுக்கே சென்று அரசு சேவைகள் வழங்கும் குழுவினர் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை 74 வீடுகளுக்கு நேரில் சென்றனர். இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தை முதல்வர் கேஜரிவால் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். 
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை மறுஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் தில்லி கேபினட்அமைச்சர்கள், திட்டத்தில் தொடர்புடைய பங்குதாரர்கள் பங்கேற்றனர்.
ஆப்ரேட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: முதல் நாளான திங்கள்கிழமை 50 தொலைபேசி இணைப்புகளில் பதில் அளிக்க 40 ஆப்ரேட்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை இந்த தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரிக்கப்பட்டது.
மேலும், ஆப்ரேட்டர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்த்தப்பட்டது. புதன்கிழமையில் இருந்து ஆப்ரேட்டர்களின் எண்ணிக்கை 150ஆகவும், தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை 200ஆகவும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

*    13,783     அழைப்புகளுக்கு இணைப்புக் கொடுக்கப்பட்டது
*    4,758     அழைப்புகளுக்கு பதிலளித்தனர்
*    8,101     பதிலளிக்கப்பட்டாத அழைப்புகளுக்கு குறுந்தகவல்
*    74     வீடுகளுக்கு முகவர்கள் சென்றனர்
*    120     தொலைபேசி இணைப்புகள் அதிகரிப்பு
*    80     ஆப்ரேட்டர்கள் அதிகரிப்பு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com