இந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பின் ரத யாத்திரை தொடங்கியது: சில்லறை வணிகர்களின் பாதிப்புகளை விளக்குகிறது

வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்தால் சில்லறை வணிகர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) சார்பில் ஏற்பாடு


வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்தால் சில்லறை வணிகர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரத யாத்திரை தில்லி செங்கோட்டைப் பகுதியில் இருந்து சனிக்கிழமை தொடங்கியது.
இணைய வர்த்தக நிறுவனமான பிலிஃப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை சர்வதேச நிறுவனமான வால்மார்ட் அண்மையில் கையகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய இணையவழி வர்த்தக சந்தையில் வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நேரடியாகக் கால் பதித்தது. இதற்கு, பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், வால்மார்ட்- பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) அண்மையில் அறிவித்தது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் பாதிப்புகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ரத யாத்திரை தில்லியில் தொடங்கி இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் செல்லும் என சிஏஐடி அறிவித்திருந்தது. அதன்படி, 'சம்பூர்ணம் கிரந்தி ரத யாத்ரா' எனப் பெயரிடப்பட்ட இந்த ரத யாத்திரை தில்லி செங்கோட்டைப் பகுதியில் இருந்து சனிக்கிழமை தொடங்கியது. இந்த ரத யாத்திரையை சிஏஐடி பொதுச் செயலர் பிரவீண் கண்டேல்வால் தொடக்கி வைத்தார்.
இது தொடர்பாக தில்லியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித்திருப்பதால் பல கோடி சில்லறை வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமேஸான் இணைய வர்த்தக நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் வாங்கும் இறுதி ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், மேலும் கோடிக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவர். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் தனது கொள்கையை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இந்த ரத யாத்திரை மூலம் மக்களின் வீடுகளுக்கே சென்று வால்மார்ட்-பிலிஃப்கார்ட் ஒப்பந்தத்தால் சில்லறை வணிகர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பாக விளக்கவுள்ளோம்.
இந்த ரதம் 28 மாநிலங்கள், 120 முக்கிய நகரங்கள், 500 சிறிய நகரங்கள் உள்பட சுமார் 22,000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கவுள்ளது. இந்த யாத்திரை மூலம் சுமார் 1 கோடி மக்களை நேரில் சந்திக்கவுள்ளோம். இந்த ரத யாத்திரை தில்லி ராம்லீலா மைதானத்தில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் நிறைவடையவுள்ளது என்றார் அவர்.
இந்த நிகழ்வில் சிஏஐடி மூத்த துணைத் தலைவர் பிரிஜி மோகன் அகர்வால், செயலர் பிரவீண் கண்டேல்வால், தேசியச் செயலர் சஞ்சய் பட்வாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com