இளம் பெண் தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் இருவர் கைது

இளம்பெண் கொடூரமாக தாக்கப்படும் விடியோ சமூக ஊடங்களில் வெளியான விவகாரத்தில் புகாருக்குள்ளான, காவல் துறை அதிகாரியின் மகன் ரோஹித்


இளம்பெண் கொடூரமாக தாக்கப்படும் விடியோ சமூக ஊடங்களில் வெளியான விவகாரத்தில் புகாருக்குள்ளான, காவல் துறை அதிகாரியின் மகன் ரோஹித் தோமரை (21) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்திருந்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உத்தம் நகரில் உள்ள ஹஸ்தல் ரோடு சாலையில் கால் சென்டர் நடத்தி வரும் அலி ஹசன் (40), அந்த அலுவலகத்தின் உதவியாளராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம் பெண்ணை இளைஞர் தாக்குவது தொடர்பான விடியோ சமூக ஊடங்களில் வைரலாக வெளியானது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்தனர். இளம் பெண்ணைத் தாக்கிய நபர் ரோஹித் தோமர் என்பதும் அவர் மத்திய தில்லியில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அசோக் குமார் தோமரின் மகன் என்பதும் தெரிய வந்தது.
மேலும், உத்தம் நகரில் உள்ள தனது நண்பரின் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பெண்ணை செப்டம்பர் 2-ஆம் தேதி வரவழைத்து தாக்கியது தெரிய வந்தது. இது தொடர்பாக அப்பெண் வெள்ளிக்கிழமை உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தம்மை தோமர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். இதனிடையே, தோமர் மீது மற்றொரு பெண்ணும் திலக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், "தோமர் தம்மிடம் ஒரு விடியோவைக் காண்பித்தார். அதில் பெண் ஒருவரை அவர் கடுமையாக தாக்குவது இடம் பெற்றிருந்தது. மேலும், தான் கூறுவது போல் கேட்காவிட்டால் அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்ததுபோல் எனக்கும் நேரிடும் என்று தோமர் மிரட்டினார்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக மேற்கு தில்லி காவல் துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ரோஹித் தோமர் தவிர அலி ஹசன், ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய இளம் பெண் தாக்கப்படும் விடியோ தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட விடியோல் இளைஞர் ஒருவர் பெண் தாக்கப்படும் சம்பவத்தை விடியோ எடுப்பதும், ஒருவர் குறுக்கே நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com