பாலியல் பலாத்கார வழக்கு: உபேர் ஓட்டுநரின்ஆயுள் தண்டனையை உறுதி செய்தது தில்லி உயர் நீதிமன்றம்

தில்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இளம் பெண்ணை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் உபேர்


தில்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த இளம் பெண்ணை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் உபேர் தனியார் டாக்ஸி நிறுவனத்தின் ஓட்டுநருக்கு வழங்கப்பட்ட கடுங்காவல் ஆயுள் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. அப்போது, கடுமையான சட்ட விதிகள் புதிதாக அமலுக்கு வந்த போதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். முரளிதர், விநோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் (யாதவ்) மீது முந்தைய குற்றப் புகார்கள் இருந்த போதிலும், அதிலிருந்து அவர் எவ்வித பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
இந்திய தண்டனைச் சட்டம் 376-ன் கீழ் அவருக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில், அதே குற்றச்சாட்டு தொடர்புடைய இதர வழக்கு நிலுவையில் உள்ளது.
அவருடைய நடத்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாக ஏற்பட்ட வேதனை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, மனுதாரருக்கு அளிக்கப்பட்ட தண்டனை விஷயத்தில் எவ்விதக் கருணையும் காட்டுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி, அச்சுறுத்தியுள்ளார். இதனால், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான புதிய விதிகள் இருந்த போதிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
2012, டிசம்பர் 12-ஆம் தேதி பாலியல் சம்பவத்திற்குப் பிறகு கடுமையான சட்டவிதிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையின்பேரில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு பிரிவு 372(2) (எம்) அமலுக்கு வந்ததுள்ளது. தேசிய குற்ற ஆவணப் பிரிவு புள்ளிவிவரத் தகவலின்படி 2016-ஆம் ஆண்டு 38,947 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இதை வேறுவிதமாக சொல்ல வேண்டுமெனில் அந்த ஆண்டில் (2016) ஒவ்வொரு மணிநேரத்திற்கும் குறைந்தது 5 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னணி: குருகிராமில் தனியார் நிதி நிறுவனத்தில் நிதிப் பிரிவில் பணியாற்றும் 25 வயது பெண் கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பணி முடித்துவிட்டு ஒரு விருந்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து உபேர் கால் டாக்ஸியில் வசந்த் விஹார் பகுதியில் இருந்து தில்லி
இந்தர்லோக் பகுதியில் உள்ள வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த கால் டாக்ஸியின் ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ் (32), அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தினங்களுக்குப் பிறகு ஓட்டுநர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தில்லி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவுக்கு கடுங்காவல் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் 2015, நவம்பர் 3-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com