வாக்குப் பெட்டிகளை பறிக்க முயற்சி: ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்- 14 மணி நேரத்துக்கு பிறகு தொடங்கியது

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியின்போது வன்முறை

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியின்போது வன்முறை ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் குழு தெரிவித்தது.
சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மாலை 6.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. ஜேஎன்யு குறைதீர் பிரிவின் இரண்டு ஆசிரியர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட பிறகு 14 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்குகள் எண்ணும் மையங்களுக்குள் சிலர் நுழைந்து வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுகளையும் பறிக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினர்தான் காரணம் என இடதுசாரி கட்சிகளின் ஆதரவு மாணவர் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால், இதற்கு ஏபிவிபி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பதிவான வாக்குகளை அன்றைய இரவு 10 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடக்கம் குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டி ஏபிவிபியினர் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்து வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுகளையும் பறிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலையில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட ஜேஎன்யு தேர்தல் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாக்கு எண்ணும் ஏஜென்ட்டுகள் வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுதான் பணிகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மூன்று முறை மைக்குகளில் அறிவிப்புகள் வெளியிடப்படாமல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் மாணவர்கள் மத்தியில் விஷம பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பிறகு பாதுகாவலர்களிடம், வாக்கு எண்ணிக்கை ஏஜென்டுகள் வந்தால் அவர்களை உள்ளே விட வேண்டும் என்று கூறினோம். 10 வேட்பாளர்களுக்கு 14 ஏஜென்டுகள் வந்தார்கள். அவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டிருந்த வாக்கு சீட்டு பெட்டிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு உள்ளே வரும் ஏஜென்டுகளை அனுமதிக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், சில மாணவர்கள் வலுக்கட்டாயமாக கட்டடத்துக்குள் நுழைந்து, வாக்கு எண்ணும் மையத்துக்கே வந்தனர். இதனால் வாக்கு எண்ணும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. மீண்டும் வாக்கு எண்ணிக்கையை தொடங்க சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைபோல், வியாழக்கிழமை நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
6 ஆண்டுகளில் அதிக வாக்குப் பதிவு
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் 67.8 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் இடதுசாரி ஆதரவு பெற்ற மாணவர் சங்கங்களான ஏஐஎஸ்ஏ, எஸ்எப்ஐ, டிஎஸ்எப், ஏஐஎஸ்எப் ஆகியவை கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. இவர்களைத் தவிர ஏபிவிபி, காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கமான என்எஸ்யுஐ, பிஏபிஎஸ்ஏ ஆகிய சங்கங்களின் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
நீதிமன்றத்தில் முறையிடுவோம் - ஏபிவிபி
வாக்கு எண்ணிக்கை தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இடதுசாரி சங்க நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. விதிமுறைகளுக்கு மீறி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதன் மூலம் தேர்தல் குழு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கேள்வி எழுந்தது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வன்முறையில் ஈடுபடவில்லை.
நீதி கேட்டு, குறைதீர் பிரிவில் முறையிட்டுள்ளோம். அங்கு நீதி கிடைக்கவில்லை என்றால் இந்த விவகாரத்தை தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடவும் தயங்க மாட்டோம் என்று ஏபிவிபி தலைவர் விஜய் குமார் தெரிவித்தார்.
"அறிவித்தும் யாரும் வரவில்லை'
தேர்தல் குழு அறிவித்த பின்னரும் ஏபிவிபி சார்பில் வாக்கு எண்ணிக்கை ஏஜென்டுகள் யாரும் வரவில்லை என்று இடதுசாரி மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அதிகாலை 4.00 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்த மையத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதாக தேர்தல் குழுவினர் அறிவித்தனர் என்று அவர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com