தலைநகரில் 2.6 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றம்: தலைமை தேர்தல் அதிகாரி
By DIN | Published On : 04th April 2019 06:06 AM | Last Updated : 04th April 2019 06:06 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தில்லியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 2.6 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு எதிராக 112 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தில்லி தலைமை தேர்தல் அதிகாரி ரண்பீர் சிங் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. தில்லியில் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1.4 கோடியாகும். இதில் ஆண்கள் 77.51 லட்சம் பேர், பெண்கள் 63.27 லட்சம் பேர். 668 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட கடந்த 10-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தில்லி தலைமை தேர்தல் அதிகாரி ரண்பீர் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லி முழுவதும் 2.6 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. புது தில்லி முனிசிபல் கவுன்சில் நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 30,533; கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 43,075; தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 2,411; தெற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 90,415; வடக்கு தில்லி மாநகராட்சி பகுதிகளில் 89,162 என்ற எண்ணிக்கையில் சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.
முதல் தகவல் அறிக்கைகள் பதிவு: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் , சமாஜவாதி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், பல்வேறு அமைப்புகளுக்கு எதிராகவும் இதுவரை 112 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர், கலால் சட்டத்தின்கீழ் இதுவரை 599 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 592 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஆயுதச் சட்டத்தின்கீழ் 203 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, 243 பேர் கைது செய்யப்பட்டனர். உரிமம் இல்லாத 316 துப்பாக்கிகளும், 2,354 தோட்டாக்களும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2.57 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோ அல்லது அதனை அனுமதிக்கவோ கூடாது என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அரசு அறிவுறுத்தியிருந்தது. மேலும், சமூக ஊடகங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருவதாக ரண்பீர் சிங் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.