சாந்தினி சௌக் மக்களை ஏமாற்றிவிட்டார் ஹர்ஷ்வர்தன்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
By DIN | Published On : 12th April 2019 12:15 AM | Last Updated : 12th April 2019 12:15 AM | அ+அ அ- |

கடந்த 5 ஆண்டுகளில் சாந்தினி சௌக் மக்களை அந்தத் தொகுதி மக்களவை பாஜக உறுப்பினர் ஹர்ஷ்வர்தன் ஏமாற்றிவிட்டார் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
2014-19 ஆண்டுகளில் ஹர்ஷ்வர்தனின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டை ஆம் ஆத்மி கட்சியின் தில்லி அமைப்பாளர் கோபால் ராய், சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் பங்கஜ் குப்தா ஆகியோர் புதன்கிழமை வெளியிட்டனர்.
அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்து கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டது. அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியையே பிரதானமாக முன்வைத்து மக்களிடம் ஹர்ஷ்வர்தன் வாக்குசேகரித்தார்.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை. முழு மாநில அந்தஸ்து கோரிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு முறை கூட அவர் உரையாற்றவில்லை.
மேலும், சாந்தினி சௌக் தொகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் எந்தவொரு மக்கள் நலத் திட்டப் பணிகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. இத்தொகுதியில் வணிகர்கள் அதிகம் உள்ளனர். சீலிங் நடவடிக்கைகளால் அவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த சீலிங்கை தடுத்து நிறுத்தவும் ஹர்ஷ்வர்தன் முயற்சி மேற்கொள்ளவில்லை. பொய்யான வாக்குறுதிகளை வழங்கி சாந்தினி சௌக் மக்களை அவர் ஏமாற்றி விட்டார்.
மத்திய அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக உள்ள அவர், தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று கோபால் ராய், பங்கஜ் குப்தா கூறினர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G