பாஜகவுக்கு எதிரானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: கேஜரிவால் குற்றச்சாட்டு
By DIN | Published On : 12th April 2019 12:17 AM | Last Updated : 12th April 2019 12:17 AM | அ+அ அ- |

நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலாம் கட்ட மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் விடுபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இது தொடர்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், "பாஜகவுக்கு எதிரானவர்களின் பெயர்கள் நாடு முழுவதும் பெருமளவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?
பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு விழுவதற்குக் காரணம் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், நமோ தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்துள்ளதா? என மற்றொரு சுட்டுரைப் பதிவில் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பதிவில், "மீண்டும் இந்தியப் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பாகிஸ்தானுக்கும் பிரதமர் மோடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது தெளிவாகியுள்ளது.
தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி மோடிக்கு உதவும் வகையில், புல்வாமாவில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதா என அனைவரும் கேட்கின்றனர். நமோ தொலைக்காட்சிக்கு உரிமையாளர் யார் எனத் தெரியவில்லை என்கின்றனர்.
பிரதமர் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக நமோ தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் நிதியுதவி அளித்துள்ளதா?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.