தில்லியில் மட்டும் காங்கிரஸுடன்கூட்டணி அமைக்கத் தயாரில்லை: ஆம் ஆத்மி

தில்லியில் மட்டுமாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என்று  ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 


தில்லியில் மட்டுமாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாரில்லை என்று  ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக அக்கட்சியின் முக்கியத் தலைவரும், தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: 
நாட்டின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மோடி, அமித்ஷா உள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களைத் தோற்கடிப்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் பிரதான இலக்காகும். இதனால், வேற்றுமைகளைக் களைந்து, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருந்தோம்.
 கூட்டணி அமைப்பது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, தில்லி, ஹரியாணா, கோவா, சண்டீகர், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 33 மக்களவைத் தொகுதிகளில்  கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என ஆம் ஆத்மி வலியுறுத்தியது. ஆனால், எங்களது கோரிக்கை தொடர்பாக எந்த முடிவையும் தெரிவிக்காமல், காங்கிரஸ் வேண்டுமென்றே காலம் கடத்தியது. 
இந்த 33 தொகுதிகளில், 23 தொகுதிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வசம் உள்ளது. அந்த மாநிலங்களிலும் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே கூட்டணி ஏற்பட்டால், இந்தத் தொகுதிகளில் பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கு சவால் அளிக்க முடியும் என ஆம் ஆத்மி கருதுகிறது. 
 இந்நிலையில், தில்லியில் மட்டும் கூட்டணி அமைப்பது என்றால் எங்களுடன் இணைந்து போட்டியிடத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், தில்லியில் மட்டும் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி தயாராக இல்லை. இப்போதும் கூட ஹரியாணா, சண்டீகர் ஆகிய மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி ஒத்துக் கொண்டால் கூட்டணி சாத்தியமாகும் என்றார் அவர். 
முன்னதாக, தில்லியில் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி முன்வராத நிலையில், காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தில்லி மேலிடப் பொறுப்பாளர் சாக்கோ வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். இந்நிலையில், மணீஷ் சிசோடியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com