நாடாளுமன்றத்தில் அம்பேத்கருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
By DIN | Published On : 14th April 2019 11:49 PM | Last Updated : 14th April 2019 11:49 PM | அ+அ அ- |

சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மலர் மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் ராம்தாஸ் அதாவலே, விஜய் கோயல், தாவர்சந்த் கெலாட் மற்றும் இன்னாள், முன்னாள் உறுப்பினர்கள், மக்களவை தலைமைச் செயலர் சிநேகலதா ஸ்ரீவாஸ்தவா, மாநிலங்களவை தலைமைச் செயலர் தேஷ் தீபக் வர்மா ஆகியோரும் பங்கேற்று மலர் மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மக்களவைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை குறிப்பு அடங்கிய கையேடு வழங்கப்பட்டது.
அதேபோல், தில்லி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உள்ள அம்பேத்கர் உருவப்படத்துக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் மரியாதை செய்தனர்.
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப் படத்தை கடந்த 1990, ஏப்ரல் 12-இல் அப்போதைய பிரதமர் வி.பி. சிங் திறந்துவைத்தார்.
தில்லி சட்டப் பேரவையில்...: தில்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டாக்டர் அம்பேத்கரின் படத்துக்கு மலர் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்றுப் பேசுகையில், "சமூகத்தில் சமத்துவம், சமூக நீதியை நிலைநாட்ட பாடுபட்டவர் அம்பேத்கர். அவர், உலகில் தனித்துவமிக்கதாகத் திகழும் இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பியாவார்' என்றார்.
சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் தனது உரையில், "டாக்டர் அம்பேத்கருக்கு நாட்டின் மிகப் பெரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது அவரது மறைவுக்குப் பிறகு வழங்கப்பட்டது. ஏழைகள் மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவுகூரப்படும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்தர் பால் கௌதம் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.