சுடச்சுட

  

  டிடிஇஏ 8-ஆவது பள்ளியில் அடுத்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை

  By DIN  |   Published on : 17th April 2019 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) எட்டாவது பள்ளியில் அடுத்த கல்வி ஆண்டில் தொடக்க நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை  மேற்கொள்ள உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பரில் வழங்கத் திட்டமிடப்பட்டு வருவதாகவும் டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு தெரிவித்தார்.
  தலைநகர் தில்லியில் டிடிஇஏ ஏழு பள்ளிகளை நடத்தி வருகிறது. மொழிச் சிறுபான்மையினருக்குரிய பள்ளிகள் எனும் அங்கீகாரத்துடன் இப்பள்ளிகள் தில்லி அரசின் மானியம் பெற்று மந்திர்மார்க், லோதி வளாகம், பூசா சாலை,  லக்ஷ்மிபாய் நகர், மோதிபாக், ராமகிருஷ்ணாபுரம், ஜனக்புரி ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன. மதராஸி அசோசியேஷன்' மூலம் 1923-இல் சிம்லாவில் ஓர் ஆசிரியர் ஒரு மாணவருடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி,  தற்போது ஏழு பள்ளிகளாக உயர்ந்து 95 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவையை அளித்து வருகிறது.  டிடிஇஏ  எட்டாவது பள்ளி மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் கட்டப்பட்டு வருகிறது.
  இந்நிலையில்,  டிடிஇஏ லோதி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை டிடிஇஏ செயலர் மற்றும் டிடிஇஏ ஊடக குழுவின் தலைவர் ஆர். ராஜு  தலைமையில் டிடிஇஏ பள்ளிகளின் ஊடக, செய்தித்தாள் குழுவின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியின் முதல்வருமான சித்ரா ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இக்கூட்டத்தின் போது,  டிடிஇஏ பள்ளிகளின் செயல்பாடுகள், அதன் மேம்பாட்டுக்காக நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. 
  அப்போது  மயூர் விஹார் டிடிஇஏ எட்டாவது பள்ளி கட்டுமானப் பணி குறித்து டிடிஇஏ செயலர் ஆர். ராஜு  செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
  தில்லியில் வெவ்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் டிடிஇஏவின் ஏழு பள்ளிகளில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.  எட்டாவது பள்ளி மயூர் விஹார் பேஸ் 3-இல் முதலாவது கட்டமாக ரூ.13 கோடியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று தளங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. நான்காவது தளத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கட்டடத் தொகுதி மொத்தம் ஐந்து தளங்களைக் கொண்டது. தற்போது முதலாவது பேஸ் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. 36 அறைகள் கட்டப்படவுள்ளன. அது  முற்றிலும் டிஜிட்டல் வகுப்பறைகள் ஆகும்.  இது நவீன பள்ளியாக செயல்படும்.  பப்ளிக் பள்ளி தரத்தில் இருக்கும்.
  இப்பள்ளி அமைவதால் மயூர்விஹார் பேஸ் 1,  பேஸ் 3,  கல்யாண்புரி, திரிலோக்புரி உள்ளிட்ட  யமுனைஆற்றுக்கு அந்தப் பக்கம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் லோதி வளாகம் பள்ளிக்கு நீண்ட நேரம் வாகனங்களில் பயணம் செய்வது தவிர்க்கப்படும்.  இப்பள்ளியில் டிடிஇஏ நிர்வாகம் 2020-2021 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதன்படி எல்கேஜி, யுகேஜி மற்றும் 1 முதல் ஐந்து வகுப்புகள் வரை தொடங்கவும், இதற்கான விண்ணப்பங்களை நிகழாண்டு செப்டம்பரில் விநியோகிக்கவும்  டிடிஇஏ நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
  இப்பள்ளிக் கட்டடத்துக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி அளித்துள்ளது. டிடிஇஏ சார்பிலும் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.3 கோடி நிதி தேவையாக உள்ளது. 
  தில்லியில் உள்ள தில்லி தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட  பிற தமிழ் அமைப்புகள்,  அரசு,  தனியார் நிறுவனங்கள்,  அறக்கொடையாளர்கள் ஆகியோர் நிதியுதவி அளிக்குமாறு கோரி வருகிறோம். அந்த நிதி கிடைத்தால் கட்டடப் பணிகளை விரைவில் முடித்துவிடலாம். அதேபோன்று,  துவாரகா பகுதியில் டிடிஇஏ சார்பில் கல்லூரி தொடங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
  இந்நிகழ்வில் டிடிஇஏ  ஏழு பள்ளிகளைச் சேர்ந்த ஊடக,  செய்தித்தாள் குழுவின் உறுப்பினர்களான ஆசிரியைகள் பங்கேற்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai