சுடச்சுட

  


  தில்லியிலும், தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளிலும் அனல் காற்று வீசி வந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை காலை தூறல் மழை பெய்தது. தொடர்ந்து நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும்,  குளுகுளு தட்பவெப்பத்துடனும் இருந்தது. 
  தில்லியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகலில் அனல் காற்று வீசியது. இதனால், புழுக்கத்தால் தில்லிவாசிகள் அவதிக்கு உள்ளாக நேரிட்டது. 
  இந்நிலையில்,  செயற்கைக்கோள் தகவல்,  வானிலை பகுப்பாய்வு தகவலின்படி,  மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து உருவாகும் காற்றின் காரணமாக தில்லி, என்சிஆர் பகுதிகளில் செவ்வாய்,  புதன்கிழமை இரு நாள்களிலும் வானிலையில்  பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக ஏப்ரல் 16-ஆம் தேதி பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.
  மேலும்,  தில்லி, என்சிஆர் பகுதியில் செவ்வாய், புதன் (ஏப்ரல் 16, 17) ஆகிய நாள்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், மின்னல், ஆலங்கட்டி மழையுடன்  தீவிர வானிலை இருக்க வாய்ப்புள்ளது. 
  மணிக்கு 60-70 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்படி,  செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 
  அதிகாலையில் பல இடங்களிலும் தூறல் மழை பெய்தது. இதனால், குளு குளு காற்று வீசியது. பகலில் மிதமான வெயில் இருந்தது. மாலையில் மீண்டும் பலத்த காற்று வீசியது. 
  குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமான காலத்தில் ஒரு புள்ளி குறைந்து 20.5 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30.7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. 
  காலை 8.30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 53 சதவீதமாகவும்,  மாலை 5.30 மணிக்கு ஈரப்பதம் 83 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. 
  புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும், இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai